ஆன்மிகம் என்பது மோட்சத்திற்கு வழி காட்டுவது. இந்த உலகத்தில் வாழும் போது, எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைப்பதில்லை என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். உண்மையில் ஆன்மிகம் வாழ்வியலுக்கும் வழிகாட்டுகின்றது. எப்படி வாழ வேண்டும் என்று நெறிப்படுத்துகிறது. ஒருமுறை நம்மாழ்வாரின் கதையை நண்பருக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். நம்மாழ்வார் திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஆழ்வார் திருநகரி என்கின்ற ஊரில் அவதரித்தவர். வெகுகாலம் குழந்தை இல்லாமல் இருந்த உடைய நங்கை காரியார் தம்பதிகளுக்கு இறைவன் அருளால் பிறந்தவர். ஆனால், பிறந்த குழந்தை பால் குடிக்கவில்லை. பேசவில்லை. வித்தியாசமாக இருந்தார். மற்ற குழந்தைகளுக்கான அழுகை சிரிப்பு போன்ற எந்தச் செயலும் இவரிடத்தில் இல்லை.
குழந்தையின் நிலையை எண்ணி வேதனைப்பட்ட பெற்றோர்கள், ஒரு நாள் சந்நதிக்கு அழைத்து வந்தார்கள். ஆனால், அந்தக் குழந்தை தவழ்ந்து பிரகாரத்தை வலம் வந்து பக்கத்தில் இருந்த புளிய மரத்தடியில் போய் அமர்ந்து கொண்டது. அமர்ந்தது அமர்ந்ததுதான். கண்ணை மூடிக்கொண்டது. யாரையும் பார்க்கவில்லை, யாரிடமும் பேசவில்லை. யோகநிலையில் குழந்தை அமர்ந்துவிட்டது. 16 வருடம் ஆழ்வார் அந்த புளிய மரத்தடியில் யோகநிலையில் அமர்ந்திருந்தார் என்று அவருடைய சரித்திரத்தை சொல்லிக் கொண்டிருந்தேன். நண்பர் கேட்டார். ‘‘இது என்ன நம்பும்படியாகவா இருக்கிறது? 16 வருடங்கள் யாராவது சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருக்க முடியுமா?’’
‘‘நீங்கள் சொல்வது உண்மைதான் 16 வருடங்கள் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.’’
‘‘ஆழ்வார் அப்படி இருந்தார் என்று சொல்வது எப்படிப் பொருந்தும்?’’
‘‘அவர் சாப்பிடவில்லை என்று யார் சொன்னது? நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்.’’நண்பர், ‘‘என்ன.. மாற்றி மாற்றிப் பேசுகிறீர்கள்? 16 வருடம் சாப்பிடவில்லை என்று சொன்னீர்கள்; இப்பொழுது சாப்பிட்டுக் கொண்டிருந்தார் என்று சொல்கிறீர்களே?’’
‘‘வாழைஇலை போட்டு தினசரி பொன்னி அரிசியை சாதமாகக் குவித்து கட்டி சாம்பார், ரசம், மோர், வடை என்று கலந்து கட்டி சாப்பிட்டால்தான் சாப்பிட்டதாக அர்த்தமா?’’‘‘பிறகு?’’
‘‘இதைவிட அமுதமாகிய ஒரு உணவை 16 வருடமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்’’‘‘எப்படித் தெரியும்?’’
‘‘அவரே சொன்னதுதான்’’ நான் உடனே ஒரு பாசுரத்தைச் சொன்னேன். பாடலை முழுமையாகக் கூடச் சொல்லவில்லை. ஒரு வரியைச் சொன்னேன்“உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே”. பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்துள்ள பரிபூரண ஆனந்தமாகிய பகவானையே அவர் சலிக்காமல் 16 வருடமும் “வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன்” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஆகையினாலே அவருக்குச் சோர்வில்லை. சோர்வினால் பெறும் மயக்கம் இல்லை. தளர்ச்சி இல்லை. ஆனந்த நிலையில் இருந்தார்.
சரி, இது ஏதோ மகான்களின் கதை. இந்தக் கதையை வைத்துக் கொண்டு நடைமுறை வாழ்க்கையில் நாம் என்ன செய்ய முடியும்? அவர் 16 வருடங்கள் கண்ணனைச் சாப்பிட்டார். ஆனால் நம்மால் முடியுமா? என்று கேட்கலாம். இதில் ஆயிரம் தத்துவக் கருத்துக்கள் இருக்கின்றன. அதையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள். ஒரு சம்சாரிக்கு இதிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்ள முடியுமா? என்று பார்க்கலாம். எல்லோரும் பொதுவாக கஷ்டங்களை, துன்பங்களை விரும்புவதில்லை. மகிழ்ச்சியை விரும்புகின்றோம். மகிழ்ச்சி என்பது என்ன? அது எப்பொழுது கிடைக்கும்? நம்முடைய மனது ஏற்கக் கூடிய ஒரு செயலைச் செய்கின்ற பொழுது ஆனந்தமாக இருக்கும்.
உதாரணமாக, ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாடுகிறது. அந்தக் குழந்தைக்கு வேறு ஏதாவது உடல் உபாதைகள் இருந்தாலும்கூட பொருட்படுத்தாது. நேரம் காலம் பார்க்காமல் விளையாடிக் கொண்டே இருக்கும். எத்தனை முறை கூப்பிட்டாலும் இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதை விட்டு விட்டு வரமாட்டார்கள். எதுவொன்று நமக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறதோ, அது மகிழ்ச்சியைத் தரும். பெற்ற குழந்தையைத் தூக்கிக் கொண்டு தாய்மார்கள் நடப்பதைப்போல, எத்தனைக் கஷ்டமாக இருந்தாலும் பிடித்தமானது மகிழ்ச்சியைத் தரும். பிடிக்காதது எதுவாக இருந்தாலும், அது எத்தனை சுலபமாக இருந்தாலும் துன்பத்தைத் தரும்.
மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு விஷயங்கள்தான். ஒன்று விரும்புகின்ற செய்கையை செய்வதன் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். அல்லது, நாம் செய்கின்ற செயல்களை ஆனந்தமாக மாற்றிக் கொள்வதன் மூலமாக ஆனந்தத்தை அடையலாம். இந்த அடிப்படையைத் தான் நம்மாழ்வார் பாசுரத்தில் நாம் தெரிந்து கொள்ளுகின்றோம். நம்மாழ்வார் பாசுரம் மட்டுமல்ல மற்ற அருளாளர்கள் வாழ்க்கையிலிருந்தும் இதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி. நாயன்மார்களுக்குச் சிவபெருமானைத் தவிர வேறு எதுவும் சிந்தையில் இல்லை. அதனால்தான் அவர்களால் நாம் யாருக்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்று ஆனந்தமாக வாழ்க்கை முழுக்க உலா வர முடிந்தது.
அபிராமி பட்டருக்கு அமாவாசை என்பதே கண்ணுக்குத் தெரியவில்லை. அம்பிகை நெஞ்சில் நின்றதால் ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாகத் தான் தெரிந்தது. அவருடைய பார்வை முழுக்க வெளிச்சத்தின் மேலே இருந்தது. ஆழ்வாரின் 16 வருடமும் உணவு, பேச்சு எல்லாம் எம்பெருமானிடம் சம்பந்தப்பட்டு இருந்ததால் அவர் மற்றவர்கள் போல இல்லை. மாறி இருந்ததால் அவருக்கு மாறன் என்று பெயர் வைத்தார்கள். நாம் மற்றவர்களைப் போல இருக்க வேண்டும் என்று நினைப்பதால்தான் இத்தனைத் துயரங்களும் வருகின்றன. நமக்கு எது வருமோ, எது கிடைத்து இருக்கிறதோ அதை அனுபவிக்கத் தெரியாமல், இல்லாத ஒரு விஷயத்தையும் கிடைக்காத ஒரு விஷயத்தையும் நினைத்து அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
சுருக்கமாகச் சொன்னால், திறந்திருக்கும் கதவுகள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நான் பெரும்பாலும் மூடிய கதவுகளை விடாமல் தட்டிக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்கு இறைவனால் வழங்கப்பட்ட இன்பத்துக்குரிய பல விஷயங்களும் கண்ணுக்குத் தெரியவில்லை.ஒருவருக்கு குழந்தை இல்லை. கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். ரொம்பநாள் கழித்து அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. மறுபடியும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.
‘‘ஏனய்யா, அதுதான் குழந்தை பிறந்து விட்டது ஏன் கஷ்டப்படுகிறீர்கள்?’’ என்று கேட்டபோது சொன்னார்;
‘‘ஒரு பெண் குழந்தை இல்லையே என்று கஷ்டப்படுகிறேன்.’’
கஷ்டப்பட வேண்டும் என்று நான் நினைத்துவிட்டால் அதற்கென்று விஷயங்கள் இல்லாமல் இருக்காது.
அதைப்போல சுகப்பட வேண்டும் என்று நினைத்துவிட்டால் அதற்கான விஷயங்களும் இருக்கத்தானே செய்கின்றன. ஆழ்வார் தனக்கு எது சுகமோ அதை நினைத்து சுகப்பட்டார். நாம் அதற்கு மாறாக இருக்கின்றோம். அதனால் கஷ்டம் நமக்கு வருவதில்லை கஷ்டத்தை வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
தேஜஸ்வி