திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மாணிக்கம் நகர் அருகே உள்ள ரயில்வே சுரங்கப்பாதை வழியாக திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர், சரஸ்வதி நகர் மற்றும் ராஜாசண்முகம் நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். சுரங்கப்பாதை கட்டப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டதால் தரை, சுவர்கள் பழுதடைந்துள்ளதுடன் ஊற்று நீர் வெளியேறுவதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் தவித்துவந்தனர். இதனால் சுரங்கப்பாதையை சீரமைத்து தரவேண்டும் என்று கவுன்சிலர்கள் மண்டல குழு கூட்டத்தில் தலைவர் தி.மு.தனியரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் சுரங்கப்பாதை மூடப்பட்டு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப் பாதையை பயன்படுத்தவும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தி அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டன. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதையில் பழுதடைந்த தரையை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வசித்துவரும் பொது மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மாற்று பாதையில் வரவேண்டும். இதனால் அவசரத்திற்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். எனவே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என்று கே.கார்த்திக் மண்டல உதவி ஆணையர் விஜயபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.