திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் 7வது வார்டு ராஜாஜி நகரில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பல தெரு விளக்கு கம்பங்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. குறிப்பாக இந்திராகாந்தி நகரில் தெருவோரத்தில் அமைந்துள்ள மின்கம்பம் மழையால் சாய்ந்தும், பழுதடைந்தும் மிக மோசமாக கிடப்பதோடு, மின் வயர்கள் தாழ்வாக தொங்குகின்றன.
இதனால் அந்த வழியாகச் செல்லும் பள்ளி வாகனம் மற்றும் குடிநீர்லாரி மீது மின் கம்பங்கள் உரசி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் மழை பெய்யும்போது இந்த தெரு வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இந்த மின் கம்பங்கள் மற்றும் வயர்களை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருவொற்றியூர் தெருவிளக்கு மின்பிரிவு அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி மின் அதிகாரிகள் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.