திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை இருப்புப் பாதை வழியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், இரயில்வே மேம்பாலத்தின் மாற்றுப் பாதையான எர்ணாவூர் பாலம் மற்றும் மாட்டு மந்தை பாலம் ஆகியவற்றை பயன்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5, திருவொற்றியூர் மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை இருப்புப் பாதை வழியில் ரூ.1.42 இலட்சம் மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், தற்காலிகமாக இந்தப் பாதையானது மூடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 15 தினங்களுக்குள் முடிக்கப்படும்.
இந்தப் பாதை மூடப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் சரக்கு இரயில் பெட்டிகளின் தண்டவாளத்தை கடந்து செல்வது மிகவும் ஆபத்து மற்றும் அபாயகரமானது. பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் ஆபத்தான முறையில் இரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டாம்.
மேலும், சுரங்கப்பாதை இருப்புப் பாதை வழியில் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை இரயில்வே மேம்பாலத்தில் மாற்றுப் பாதையான எர்ணாவூர் பாலம் மற்றும் மாட்டு மந்தை பாலம் ஆகியவற்றை பயன்படுத்துமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.