திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் மாணிக்கம் நகர் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள அம்பேத்கார் நகர், சரஸ்வதி நகர் மற்றும் ராஜா சண்முகம் நகர் உட்பட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்றுவருகின்றனர். இந்த ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் கடந்த மாதம் 22ம்தேதி சுரங்கப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்று மாற்று பாதையில் வரவேண்டும் என்பதால் அவசரத்துக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு செல்ல மாணிக்கம் நகர் சுரங்கப்பாதைக்கு மேலே உள்ள தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இந்த நிலையில், கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவர்கள் மாணிக்க நகர் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
நேற்று மாணிக்கம் நகர் மேம்பாலத்தின் மேலே கூட்ஸ் ரயில் சிக்னல் இல்லாமல் நின்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்க முடியாமல் தவித்த மாணவிகள் நேரமாகிவிட்டதால் கூட்ஸ் ரயிலில் கீழே குனிந்து சென்றனர்.‘’திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்வதால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே சுரங்கப்பாதை பணியை விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.