சென்னை: ஆண்டுதோறும் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்பட்டு வருகிறது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெறும் விசாரணையில் மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும் விருப்ப அடிப்படையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும்.
திருவொற்றியூர் சார்பு நீதிபதி பிரபா தாமஸ் முன்னிலையில் நேற்று நடந்த மக்கள் மன்றத்தில் 7 வழக்குகள், குற்றவியல் நடுவர் கார்த்திக் முன்னிலையில் 656 வழக்குகள், மாவட்ட உரிமையியல் நீதிபதி ரேவந்த் முன்னிலையில் 4 வழக்கு என மொத்தம் 667 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
மேலும், ரூ.1,18,92,316 பணம் வசூலிக்கப்பட்டு மனுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில், பெரும்பாலானவை காசோலை மோசடி, கடன் பத்திரங்கள், மண முறிவு, நிலப் பிரச்னை தொடர்பான வழக்குகளாக இருந்தன. இதில், அரசு வழக்கறிஞர்கள் ஜெய்சங்கர், பொன்னிவளவன், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தன்ராஜ், வசந்தகுமாரி, நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.