பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலக்குழு கூட்டம், மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர்கள் செந்தில்நாதன், சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 71வது வார்டு உறுப்பினர் புனிதவதி எத்திராசன் பேசுகையில், முரசொலி மாறன் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும். எனது வார்டில் பல சாலைகள் பேட்ச் ஒர்க் செய்யப்படாமல் உள்ளன. அதனை உடனடியாக செய்து தர வேண்டும் என்றார்.
72வது வார்டு உறுப்பினர் சரவணன் பேசுகையில், புளியந்தோப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் பல நிறுவனங்கள் முறையாக வரி கட்டவில்லை. ஆடுதொட்டி பகுதியில் உரிய பாதுகாப்பு இல்லாததால் பல பொருட்கள் திருடு போகும் அபாயம் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் உதவி செயற்பொறியாளர் இல்லை. உடனடியாக அந்த இடத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என்றார்.
66வது வார்டு உறுப்பினர் யோகப் பிரியா பேசுகையில், தற்போது சாலைகள் போடப்பட்ட இடங்களில் கழிவுநீர் மூடிகள் சாலையிலிருந்து சற்று இறங்கி காணப்படுகின்றன. எனவே புதிய மூடிகளை போட்டு சாலைகளை சமம் செய்ய வேண்டும் என்றார்.
65வது வார்டு உறுப்பினர் சாரதா பேசுகையில், எனது வார்டில் 7 இடங்களில் புதிய பைப் லைன் அமைத்து தர வேண்டும். துப்புரவு பணியாளர்கள் குறைவாக உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மழை நீர் வடிகால் முடிந்த இடங்களில் புதிய சாலைகளை அமைத்து தர வேண்டும் என்றார். 70வது வார்டு உறுப்பினர் தனி பேசுகையில், எனது வார்டில் பல இடங்களில் சட்டவிரோத குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். மதுரை தெரு, பந்தர் கார்டன் தெரு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி கழிவுநீர் பிரச்னை ஏற்படுவதால் அதனை சரி செய்து தர வேண்டும் என்றார்.
ஒவ்வொரு மண்டலக்குழு கூட்டத்திலும் மின்வாரிய அதிகாரிகள் முறையாக கலந்து கொள்ளவில்லை எனவும், குறிப்பாக மின்வாரிய சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு அவர்கள் உடனடி நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் வருத்தம் தெரிவித்தார்.