* 180 பறவை இனங்கள் வந்து செல்கின்றன
* சரணாலயமாக அரசு மாற்ற கோரிக்கை
திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் பெரிய ஏரிக்கு வெளிநாடு பறவைகளின் வருகையால் வேடந்தாங்கல் போல் காட்சி அளிக்கிறது. எனவே இந்த ஏரியை அரசு பறவைகளின் சரணாலயமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மனித இனத்துக்கும் இயற்கைக்கும் உற்ற நண்பனாக பறவையினங்கள் உள்ளன. அத்தகைய பறவை இனங்கள் தட்பவெப்ப பருவ நிலைக்கு ஏற்ப நாடு விட்டு நாடு இடம் பெறுவது வழக்கம்.
அந்த வகையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த கிளியூர் கிராமத்தில் சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் இயற்கை எழில் நிறைந்த கிளியூர் ஏரியில் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை சுமார் 180க்கும் மேற்பட்ட பறவையை இனங்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய முதல் ஐரோப்பிய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து பறவை இனங்கள் வர தொடங்கியுள்ளது. தற்பொழுது இந்த ஏரியில் வெள்ளை அரிவாள் மூக்கன், உன்னி கொக்கு, பாம்பு தாரா, மஞ்சள் மூக்கு நாரை, சாம்பல் நாரை, கொண்டை நீர் காகம், ஊசிவால் வாத்து, நீலச்சிறவி வாத்து, பழுப்பு கீச்சான்கள் உள்ளிட்ட பறவையை இனங்கள் வரத் தொடங்கியுள்ளது. மேலும் நிறைய வெளிநாட்டு பறவையினங்கள் வந்து செல்லும் இடமாக இந்த கிளியூர் ஏரி இயற்கையாகவே அமைந்துள்ளது. இங்கு வரக்கூடிய பறவை இனங்கள் கூடுகள் கட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
தற்பொழுது இந்த ஏரியில் போதுமான அளவு நீர் நிரம்பி இருந்தாலும், ஏரியில் காட்டாமணக்கு செடி முளைத்து ஏரியை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை அகற்றி பறவை இனங்கள் வந்து தங்குவதற்கு ஏதுவாக ஏரியின் நடுவில் மரங்களை வளர்க்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.மேலும் பறவை இனங்களை பாதுகாக்கவும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது போன்ற நீர்நிலைகளை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் தஞ்சை மாவட்டம் கல்லணை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏரி கல்லணையிலிருந்து சுமார் 5கிலோ மீட்டர் தொலைவில் கிளியூர் ஏரி உள்ளது. இது திருச்சி மாவட்டத்தில் உள்ளது. இந்த ஏரி பறவைகள் சரணாலயமாக அரசு மாற்றும் பட்சத்தில் கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், இந்த கிளியூர் பெரிய ஏரியில் உள்ள பறவைகளை காண வருவார்கள்.
இதனால் இந்த பகுதி வளர்ச்சி அடைவதுடன் பொதுமக்களுக்கு பிழைப்பு கிடைக்கும். மேலும் அரசுக்கு வருவாயும் பெருகும். இதனால் கிளியூர் பெரிய ஏரியைபறவைகள் சரணாலயமாக மாற்றி ஆண்டு தோறும் பல வகையான பறவைகள் இங்கேயே தங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.