சுக்கிராச்சார்யார் திடுக்கிட்டார். தன்னுடைய சீடனான மகாபலி சக்கரவர்த்தி சிந்திக்காமல் வாக்களிக்கிறானே என்று கலங்கினார். உலகளாவிய பெருஞ்செல்வம் தன்னிடம் குவிந்திருப்பதால், வந்து கோருவோர் யார், என்ன தராதரம், எவ்வளவு கேட்பார், எதைக் கேட்பார் என்று சிறிதும் சிந்திக்க அனுமதிக்காத ஆணவம் மனதை, மூளையை, கண்களை மறைக்க அவன் அள்ளிக் கொடுத்தபோது உடனிருந்து அதை ஆமோதித்தவர்தான் அவர். ஆனால் இப்போது வந்திருக்கும் குள்ளன், ஒரு தந்திரக்காரன் என்பதைச் சிறிதும் உணராத மகாபலி பளிச்சென்று வாக்கு கொடுத்து விட்டானே என்று பாசமிக்க ஆசானாக அவர் துடித்தார்.
புன்சிரிப்போடு தனக்கு தன் கால்களால் அளந்துகொள்ளத்தக்க அளவுக்கு மூன்றடி மண் கேட்ட அந்த ‘அப்பாவி’யைப் பார்த்து எத்தனை இளக்காரமாக நகைத்தான் மகாபலி! இந்தக் காலால் அளக்கப்படும் மூன்றடி, இந்தப் பையனுக்கு எதற்குப் பயன்படும்? ஒரு வாழை மரம் வேண்டுமானால் நட்டுக்கொள்ளலாம்; வேறென்ன செய்ய முடியும் என்ற கேலி மனசுக்குள் பொங்கியெழ, மிக அலட்சியமாக ‘எடுத்துக்கொள், எந்தப் பகுதியில் உனக்கு அந்த மூன்றடி வேண்டும்?’ என்று கேட்டு, சம்பிரதாயமாக தானமளிக்கும் நீர்க்கெண்டியை கையில் எடுத்துக் கொண்டான். அதனால் நீரை தாரை வார்த்து அளிக்கும் தானம்தான் அந்த காலத்தில் சட்டரீதியாக தானமளிப்பவரிடமிருந்து, பெறுபவருக்கு அந்தப் பொருளை முழு உரிமையாக்கும்.
ஆனால் சிறுவன் முகத்தில் தோன்றும் மந்தஹாசமும், அவன் புன்முறுவலில் ஒளிரும் தெய்வீகமும் இவன் சாதாரண மானுடன் அல்ல; இறையம்சமே என்பதை இத்தனை ஆண்டுகள் ஆசானாக இருந்த சுக்ராச்சார்யாரால் அனுமானிக்க முடிந்தது. வந்தவன் நரனல்ல, நாராயணனே என்று ஊகிக்க அவருக்கு அதிக நேரம் தேவைப் படவில்லை. ஆனால் மன்னனோ சொன்ன வாக்கைத் திரும்பப் பெறும் வழக்கமில்லாதவன். வாரி வழங்குவதில் தான் நிகரற்றவன் என்ற இறுமாப்பு, கொடுத்த வாக்கை நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற வீம்பையும் வளர்த்திருந்தது. அவனுக்குப் பலவாறாக சாடைகளாலும், உடலசைவுகளாலும் அவன் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க அவர் முயன்றதெல்லாம் வீணாகிப் போயின.
அதோ மன்னன் நீர்க்கெண்டியைக் கையிலெடுத்துவிட்டான். தேஜோமயமாய் திகழும் பகவான் தன் கரம் தாழ்த்தி தான உத்தரவாதம் ஏற்கிறான். கெண்டி மூக்கிலிருந்து வழியும் நீர் தானத்தை உறுதி செய்யப்போகிறது. தனக்கு நிகழப் போகும் அவலத்தை உணராமல், தானமளிக்கச் சித்தமாகும் மன்னனை எப்படித் தடுப்பது? பளிச்சென்று ஒரு வண்டாக உருமாறினார் சுக்கராச்சார்யார். அப்படியே பறந்து சென்று அந்த கெண்டி மூக்கினுள் நுழைந்தார். நீர் வெளியேறாதபடி அடைத்துக் கொண்டார். கெண்டியிலிருந்து நீர் வழியாதிருக்கும் அதிசயத்தைப் பார்த்து திகைத்த மகாபலி அந்த கணத்திலாவது தன் ஆசானின் முயற்சியைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்; மாறாக ஏன் நீர் வெளியே விழவில்லை என்று குழப்பத்துடன் யோசிக்கத்தான் செய்தான்.
தன் சீடனைக் காக்க ஆசான் மேற்கொண்ட முயற்சியைப் பார்த்து தனக்குள் சிரித்துக்கொண்ட வாமனன், தான் கொண்டிருக்கும் கோலத்துக்கு ஏற்றவாறு ஒரு மானுட முயற்சியாக, ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து அந்த மூக்கு துவாரத்தில் குத்த, அது தன் ஒரு கண்ணின் பார்வையைப் பறிக்க, இனி தெய்வ சங்கல்பத்துக்கு முன்னால் தான் போட்டியிட முடியாது என்ற ஞானோதயத்தில் தன் முயற்சியிலிருந்து பின்வாங்கினார் சுக்ராச்சார்யார். நீர் தாரை வார்க்கப்பட்டது. மூன்றடி நிலமாக பூமி, ஆகாயம், மகாபலியின் ஆணவம் நிரம்பிய தலை என்று அளக்கப்பட்டு, அனைத்தும் அவற்றைப் படைத்தவனுக்கே மீண்டும் சொந்தமாயின. ஆணவமும் அடிமண்ணில் புதைந்தது.
இப்போது சுக்ராச்சார்யார் பாடு தான் திண்டாட்டமாகப் போய்விட்டது. தடை ஏற்படுத்திய தன் வண்டு உருவை அவரால் மீண்டும் சுய உருவுக்குக் கொண்டுவர இயலவில்லை. தன் மாணவனை நல்வழிப்படுத்தி அவன் மனசுக்குள் குடிகொண்டிருந்த அகம்பாவத்தை விலக்கி அவனை ஒரு நல் மாணாக்கனாக உருவாக்கவேண்டிய பொறுப்பைத் தானே உணராததன் தண்டனை அது. என்ன இருந்தாலும் அவர் அசுர குருதானே! அசுர நியதிப்படி அடிபட்டுதானே அறிய வேண்டியிருக்கிறது!
ஒரு தர்ப்பைப் புல்லால் விடுக்கப்பட்ட அந்த சாபம் நீங்கி மீண்டும் பார்வையைப் பெறும் பொருட்டு வண்டு இந்தத் தலத்துக்கு வந்தது. தான் சேகரிக்கும் தேனையெல்லாம் இங்கிருந்த புஷ்கரிணியில் இட்டு, அந்த நீரை அமிர்த நீராக்கி, இறைவனை நோக்கி தவமிருந்து, பகவானின் முயற்சிக்குத் தான் இடையூறாக இருந்த செயலுக்கு வருத்தமும் தெரிவித்தது.
பரந்தாமன் மனம் இரங்கினார். சுக்ராச்சார்யாருக்கு மீண்டும் பார்வையளித்தார். இழந்த ஒளியை மீண்டும் பெற்ற தலமாதலால் இந்த இடம் சுக்கிரபுரி என்றழைக்கப்பட்டது. தமிழில் சுக்கிரன் என்றால் வெள்ளி, ஆகவே வெள்ளியங்குடி. இதனையே, ‘வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான்’ என்று திருமங்கையாழ்வார் சிறப்பித்துள்ளார். இந்தச் சம்பவத்தை,
“மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில்
தக்கதுஇது அன்று என்று தானம் விலக்கிய
சுக்கிரன் கண்ணைத்
தும்பால் கிளறிய
சக்கரக் கயனே’’
– என்று விவரிக்கிறார் பெரியாழ்வார்.
இவ்வாறு சுக்ராச்சார்யார் மீண்டும் ஒளி பெற்றதற்கு சாட்சியாக இங்கே நேத்ர தீபமாக ஒரு தூண்டா விளக்கு, பெருமாள் கருவறையில் நிரந்தரமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் திருவெள்ளியங்குடியில் கருடாழ்வார் நான்கு திருக்கரங்களுடனும், பெருமாள் இரண்டு கரங்களுடனும் வித்தியாச கோலம் காட்டுகிறார்கள். வேறெந்த திவ்ய தேசத்திலும் காணவியலாத இந்த அபூர்வ கோலத்தினை இவர்கள் மேற்கொள்ளக் காரணம் என்ன? இதற்கும் அசுர குலம்தான் காரணம். தெய்வ தச்சனான விஸ்வகர்மா, பூவுலகில் பல்லாயிரக் கணக்கான கோயில்களை உருவாக்கி முதன்மை பெற்றது கண்டு ஏக்கமுற்ற அசுர தச்சனான மயன், தானும் முன்னுரிமை பெறவேண்டும், விஸ்வகர்மாவுக்கு இணையாகப் பேசப்படவேண்டும் என விரும்பி இத்தலத்தில் தவமிருந்தான்.
விஸ்வகர்மாவுக்கு இணையாகத் தான் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் கிடைக்காது என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டானோ என்னவோ, அவனுக்குக் கிடைப்பதுபோல பெருமாள் தரிசனமாவது தனக்குக் கிட்ட, அந்த வகையில், தான் விஸ்வகர்மாவுக்குச் சமமானவனாக மாறவேண்டும் என்று தீர்மானித்தான். அதைப் பெருமாளும் நிறைவேற்றினார். ஆனால் அவன் நாராயணனை உளமாற தரிசித்தாலும், தனக்கு அவர் ராமனாகவும் தரிசனம் நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். சரி, இவனது இந்த விருப்பத்தை நிறைவேற்றி வைப்போம் என்று பேருள்ளம் கொண்ட பரந்தாமன், தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை, அருகே இருந்த பெரிய திருவடியாகிய கருடனிடம் அளித்துவிட்டு, இரு கரங்களுடன், ஸ்ரீராமனாக திவ்ய கோலம் காட்டினார்.
பெருமாள் அளித்த அந்த சங்கு சக்கரத்தைதான் இப்போதும் இங்கே கருடாழ்வார் தாங்கியபடி விநயமாக காட்சி தருகிறார். மயனுக்குக் காட்சியளித்த அதே தோரணையில் தனக்கும் பிரசன்னமாக வேண்டும் என்று பின்னாளில் திருமங்கையாழ்வார் பிரார்த்தனை செய்துகொண்டதாகவும், அவருடையை விருப்பத்தையும் பகவான் பூர்த்தி செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தக் காட்சியைக் கண்டு பேரானந்தம் அடைந்த ஆழ்வார் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்தார். ஓங்கி உலகளந்த உத்தமன், சுக்ராச்சார்யாருக்கு அருள்பாலித்த அண்ணல் என்றெல்லாம் சிலாகித்த அவர், இந்தத் தலத்தில் வாழும் குயில்களும், ‘ஹரி, ஹரி’ என்றே கூவுகின்றன என்றும் வர்ணித்து களித்தார்.
“ஒள்ளிய கருமம் செய்வனென் றுணர்ந்த
மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறளாய் மூவடி கொண்டு
திக்குற வளர்ந்தவன் கோயில்
அள்ளியம் பொழில்வாய் இருந்துவாழ் குயில்கள்
அரியரி யென்றவை யழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்தருள் செய்வான்
திருவெள்ளியங் குடியதுவே’’
– என்பது அத்தகைய பாசுரங்களில் ஒன்று.
கருவறையில் சயனித்திருக்கும் பெருமாள் ‘கோலவில்லி ராமன்’ என்று அழைக்கப்படுகிறார். தன் கை விரல்களையே வில் போலக் கோலம் காட்டியவன் என்றும் பொருள் சொல்கிறார்கள். இதற்கும் ஒரு சம்பவம் காரணமாக அமைந்துள்ளது.
வனவாசம் மேற்கொண்ட ராமன், சித்திரகூடத்தில், ஏகாந்தமாக, மனைவி மடிமீது தலை கிடத்தி சயனித்திருந்தார். தன்னருகே நெடிது படுத்திருந்த கணவரைப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போனாள் சீதை. குறிப்பாக அவரது கரங்கள். ‘எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர்’ என்று சிவதனுசை முறித்துத் தன்னை ஆட்கொள்ள வைத்த அந்த இரு திருக்கரங்கள்தான் எத்தனை பேரழகுடன் திகழ்கின்றன. வெகு மென்மையாகத் தோன்றும் இந்தக் கரங்களா அத்தனை வலிமை கொண்டிருந்தன என்று வியந்து மகிழ்ந்தாள். அதே சமயம் அவளுடைய எழிலையும் அநாகரிகமாக ரசித்துக் கொண்டிருந்தான் இந்திரனின் மகனான ஜயந்தன். தான் ஜயந்தனாக வந்தால் எங்கே அகப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி ஒரு காகமாக உருவெடுத்து, சீதையின் அழகால் உன்மத்தம் கொண்டு, அவள் மேனியையே தன் அலகால் தீண்டும் அளவுக்கு அவன் காமுகனாக இருந்தான். இந்திரனின் பிள்ளையல்லவா!
தன் மடியில் படுத்திருக்கும் கணவரின் உறக்கத்துக்கு இடையூறு ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற அச்சத்தில் சீதையும் எவ்வளவோ பொறுமை காத்தாள். ஆனால் காகத்தின் சேட்டையால் அவள் உடலிலிருந்து உதிரம் பீறிட்டு ராமன் மீது தெறித்தது. அந்த அசாதாரண சூழ்நிலையால் திடுக்கிட்டு கண்விழித்தான் ராமன். அவனெதிரிலேயே ஜயந்த காகம் சீதையைத் துன்புறுத்திக்கொண்டிருந்தது. உடனே அங்கிருந்து விலகிச் சென்று தன் வில்லையும் அம்பையும் எடுத்துவரப் போதிய அவகாசம் இல்லை.
அந்தக் கொடியவனை உடனேயே, அந்தக் கணத்திலேயே தண்டிக்கவேண்டும் என்று தீர்மானித்த ராமன், உடனே பக்கத்தில் விளைந்திருந்த ஒரு தர்ப்பைப் புல்லைப் பிடுங்கினான். தன் கை விரல்களை வில்லாக வளைத்தான். புல்லை அம்பாக்கினான். காகத்தை நோக்கி ஏவினான். கூர் அம்பாக அந்த புல் காகத்தின் உயிர்கொள்ளப் பாய, பயந்து பறந்தோடியது காகம். அதனை விடாமல் துரத்திச் சென்று விரட்டியடித்தது புல் அம்பு. இப்படி கைவிரல்களையே வில்லாக்கி வளைத்து கோலம் காட்டியதால் கோலவில்லி ராமனானார். திருவெள்ளியங்குடியின் தலவிருட்சமும் வித்தியாசமான ஒன்று, வாழை மரம். செவ்வாழை.
கட்டாந்தரையிலும் வாழையடி வாழையாக வளர்ந்து செழிக்கிறது இந்த வாழை மரம். மூலவர் இரு திருக்கரங்களுடன் சயனக்கோலத்தில் கருணை ததும்ப காட்சி தருகிறார். சுதை சிற்பமோ என்று வியக்கும் வண்ணம் பச்சை வண்ண மேனியனாகத் திகழ்கிறார். இதனாலேயே இவரை மரகதப் பெருமாள் என்றும் அழைக்கிறார்கள். இவருக்குப் பிரதான நிவேதனப் பொருள் & செவ்வாழைப் பழம்! வாழ்க்கை வண்ணமயமாகப் பொலிய வைக்கும் பிரான் இவர். பெரும்பாலான பக்தர்கள் அர்ச்சனைத் தட்டில் செவ்வாழைப் பழம் வைத்தே கொண்டு வருகிறார்கள். கருவறைக்கு இடது பக்கம் யோக நரசிம்மரும், வலது பக்கம் ஆழ்வார்களும் திவ்ய தரிசனம் தருகிறார்கள்.
தனி சந்நதியில் சதுர்புஜனாக கருடாழ்வார் தரிசனம் தருகிறார். வாகன விபத்து ஏற்படாதவாறு காக்கும் தெய்வம் இவர் என்று பக்தர்கள் போற்றி வழிபடுகிறார்கள். பிற எந்தக் கோயிலிலும் காணப்படாத அபூர்வக் கோலமாயிற்றே! தாயார் மரகதவல்லியும், பிராகாரத்தில் தனிச் சந்நதியில், தன் உற்சவ மூர்த்தத்துடன் பேரருள் புரிகிறாள். நல்ல திருமண வாழ்க்கைக்கும், அந்த வாழ்க்கை மணம் பரப்பி நீடித்து நிலைத்திருக்கவும் தாயார் ஆசி வழங்குகிறாள்.
எப்படிப் போவது: கும்பகோணம்&அணைக்கரை வழியில் சோழபுரம் மற்றும் திருப்பனந்தாளிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள செங்கனூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி திருக்கோயில்.
கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 12.30 மணிவரையிலும், மாலை 5 முதல் 7 மணிவரையிலும். முகவரி: அருள்மிகு கோலவில்லிராமன் சுவாமி திருக்கோயில், திருவெள்ளியங்குடி, பாலாகுடி அஞ்சல், வழி திருமங்கலக்குடி, தஞ்சை மாவட்டம்-612102.
ரேஜே அலங்கார தந்வா ப்ருகு புரி நிவஸந் உத்பலா வர்த்த காக்யே
ரம்யே திவ்யே விமாநே மரகதரமயா ப்ராங்முக: சுக்ரதீர்த்தம்
பச்சாந் பாகே அஹிபோகே ம்ருது தர விமலே அநந்த போகே சயாநோ
ராம: ஸ்ரீமாந் தயாளு: ப்ரணதஸுரதருர் தேஹிநாம் அந்தராத்மா