சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் குடிபோதையில் ரகளை செய்த திருவாரூர் வாலிபரை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர். துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் நேற்று அதிகாலை சென்னை வந்தது. முன்னதாக இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த முகமது அசாருதீன் (25) என்பவர் திடீரென குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பெண் பயணிகளையும் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது.
விமான பணிப்பெண்கள் முகமது அசாருதீனை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர் போதையில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதுகுறித்து விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார். விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், போதையில் ரகளை செய்த முகமது அசாருதீனை மடக்கிப் பிடித்து, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், துபாயில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலையில் இருந்த இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்ல வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து விமான பாதுகாப்பு அதிகாரிகள் முகமது அசாருதீனை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.