முத்துப்பேட்டை : திருவாரூர் அருகே லாரியில் ஏற்றி செல்லப்பட்ட கதிரடிக்கும் இயந்திரம் மீது மின் கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள சிறுபட்டாக்கரை கிராமத்தில் அறுவை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சேலம் பகுதியிலிருந்து கதிர் அடிக்கும் இயந்திரத்தை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டு முத்துப்பேட்டை அருகேயுள்ள சிறுபட்டாக்கரை கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பட்டவெளி செல்லும் சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது தாழ்வாக சென்ற உயர்மின் அழுத்த கம்பியில், லாரி மீது இருந்த கதிர் அடிக்கும் இயந்திரம் எதிர்பாராதவிதமாக உரசியது.
அப்போது சேலம், அப்பாசமுத்திரம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த மணி மகன் ரவிக்குமார் (26) என்பவர் கதிர் அடிக்கும் இயந்திரம் மீது மின்கம்பி உரசுவதை கண்டு டிரைவரிடம் எச்சரிப்பதற்காக லாரியை தட்டினார். அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அப்பகுதியினர் ரவிக்குமாரை மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரவிக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அலட்சியமாக லாரியை இயக்கியதாக டிரைவர் விஜயகுமாரை (28) கைது செய்தனர்.