திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருகின்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஆவணி மாத பவுர்ணமி நிகழ்வு நாளை மறுதினம் (30ம் தேதி) காலை 10.58 மணிக்கு தொடங்கி, 31ம் தேதி காலை 7.05 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதையொட்டி, பவுர்ணமியன்று பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கம் போல, சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து 2 நாட்களும் பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.