திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நிறைவாக, டிசம்பர் 13ம் தேதி மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இதற்கு 4,500 கிலோ நெய், மற்றும் 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. பக்தர்கள் நெய் காணிக்கையை ரொக்கமாக செலுத்த கோயில் நிர்வாக அலுவலகம் எதிரில் நெய் காணிக்கை சிறப்பு பிரிவு நேற்று தொடங்கப்பட்டது.
ஒரு கிலோ நெய் ரூ250, அரை கிலோ நெய் ரூ150, கால் கிலோ நெய் ரூ80 என ரொக்கமாகவும் அல்லது யுபிஐ பணபரிவர்த்தனை மூலமும், கோயில் இணையதளத்திலும் செலுத்தலாம். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளித்த பேட்டியில், மகா தீபத்தன்று மலையேற 2,000 பக்தர்களுக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பக்தர்களுக்கும் மகா தீப தரிசனத்திற்கு 11,500 பக்தர்களுக்கும் கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.