திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 4.02 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 2.24 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவே திருவண்ணாமலையில் பக்தர்கள் குவியத்தொடங்கினர். தொடர்ந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். நேற்று பகலில் கூட்டம் குறைந்த நிலையில், மாலை 4 மணிக்கு பிறகு மீண்டும் கூட்டம் அதிகரித்தது.
அதனால், கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது. ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அமைந்தததால், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநில பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்திருந்தது. இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா நேற்று மாலை நடந்தது. சுவாமி சன்னதியிலும், கல்யாணசுந்தரேஸ்வரர் சன்னதியிலும் அன்னாபிஷேகம் நடந்தது.
இதனால் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதனால் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பவுர்ணமி மற்றும் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அதிகாலை 4 மணியில் இருந்தே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபுரத்துக்கு வெளியே தென் ஒத்தைவாடை தெரு, வட ஒத்தைவாடை தெரு வரை சுமார் ஒரு கிமீ தூரம் வரை தரிசன வரிசை நீண்டிருந்தது. 6மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.
14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் சென்ற பிறகு, மீண்டும் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரட்டைப்பிள்ளையார் கோயில் அருகே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் திடீரென முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனை போலீசார் கட்டுப்படுத்தினர். அதோடு, பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.