திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. வரும் 26ம் தேதி 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. அதையொட்டி, நாளை அதிகாலை 4.45 மணி முதல் 6.12 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும். அப்போது, அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி காட்சியளிப்பார். அதைத்தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனியும், இரவில் நந்தி வாகனத்தில் சுவாமி பவனியும் நடைபெறும். விழாவின் தொடர்ச்சியாக, நாளை மறுதினம் (18ம் தேதி) காலை தங்க சூரிய பிறை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர்.
வரும் 19ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனங்களில் பஞ்சமூர்த்திகளும் பவனி வருகின்றனர். 20ம் தேதி காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். வரும் 21ம் தேதி காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையாரும் பவனி வருகின்றனர். அதைத்தொடர்ந்து, 22ம் தேதி காலை உற்வசத்தில் வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் வெள்ளி தேரோட்டமும் நடைபெறும்.விழாவின் 7ம் நாளான வரும் 23ம் தேதியன்று மகா தேரோட்டம் நடைபெறும். நிறைவாக, வரும் 26ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் ஏகன் அநேகன் எனும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்துவதற்காக, பரணி தீபம் ஏற்றப்படும். அன்று மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்படுகிறது. மகா தீபத்தை தரிசிக்க சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று நேரடி ஆய்வு நடத்த உள்ளனர்.
* பாதுகாப்பு ஏற்பாடுகள் டிஜிபி நேரில் ஆய்வு
கார்த்திகை தீபத்திருவிழாவில் இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, இதுவரை எப்போதும் இல்லாத அளவில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் தீபத்திருவிழா பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ‘தீபத்திருவிழாவுக்கு இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என தகவல் கிடைத்திருக்கிறது. அதனால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் . பாதுகாப்பு பணியில் சுமார் 12 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதால், அவர்களுக்கான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு, அதனை கண்காணிக்க எஸ்பிக்கள் தலைமையில் குழு அமைக்க வேண்டும். குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்றங்கள் ஏற்படுவதை தடுக்கவும் தனி கவனம் செலுத்த வேண்டும்’ என்றார். ஆய்வின்போது, வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, கலெக்டர் பா.முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.