*உதவி உபகரணங்கள் கேட்டு 218 பேர் மனு
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில், 72 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமையன்று, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.
இந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் உதவி உபகரணங்கள் வழங்கவும், அடையாள அட்டைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
அதில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஆகிேயார் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த முகாமில், 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, மருத்துவர்கள் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டது. மேலும், செயற்கை கால், செயற்கை கை உள்ளிட்ட உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை போன்றவை கோரிக்கைகளுக்காக 218 பேர் மனு அளித்தனர். அதன்மீது, விரைவில் நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாவட்ட அளவிலான முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்க்க, ஊராட்சி அளவில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த முகாம்களிலும் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 3ம் தேதி வெம்பாக்கம் ஒன்றியம் குத்தனூர், வரும் 4ம் தேதி செய்யாறு ஒன்றியம் வடுகப்பட்டு, வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர், அனக்காவூர் ஒன்றியம் எச்சூர், தெள்ளாறு மேல்பாதி ஆகிய இடங்களில், வரும் 9ம் தேதி வந்தவாசி ஒன்றியம் ஓசூர் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுகிறது.