*தூத்துக்குடியில் இருந்து ரயிலில் வந்தது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்ட விவசாய தேவைக்கான யூரிா, உரம், காம்ப்ளக்ஸ் போன்றவை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி, 603 மெட்ரிக் டன் யூரியா, 684 மெட்ரிக் டன் ஸ்பிக் காம்ப்ளக்ஸ் உள்பட மொத்தம் 1,287 மெட்ரிக் டன் உரம் நேற்று துத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் மூலம் வந்தடைந்தது.
அதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியை, வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார் மற்றும் வேளாண் உதவி இயக்குநர் சரவணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நடப்பு மாதத்திற்கு 9,703 மெட்ரிக் டன் யூரியா, 1,173 மெட்ரிக் டன் டிஏபி, 304 மெட்ரிக் டன் பொட்டாஷ், 526 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட், 4,309 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில், உரம் வாங்க விரும்பும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி, மண்வள அட்டை பரிந்துரையின்படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் வாங்கி பயன்பெறலாம். மேலும், விற்பனை முனைய கருவி மூலம் ரசீது பெறுவது அவசியம்.
மேலும், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையில் மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு அவசியமில்லாத இதர இடுபொருட்கள் மற்றும் உரங்களை வாங்க வேண்டும் என நிர்பந்திக்க கூடாது. அவ்வாறு விதிமீறி செயல்படுவோர் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955 ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார் தெரிவித்தார்.