*அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அணைகள் உட்பட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதில் நொச்சிமலை ஏரியில் இருந்து வெளியேறிய நீரில் வந்த பெரிய மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ெதாடங்கி அதிகாலை வரை இடி மின்னலுடன் கூடிய பரவலான கனமழை பெய்தது.மாவட்டத்தில் அதிகபட்சமாக தண்டராம்பட்டு தாலுகாவில் 108.40 மிமீ மழை பதிவானது.
திருவண்ணாமலை அருகில் உள்ள கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நொச்சிமலை ஏரியில் இருந்து கால்வாயில் பெருக்கெடுத்த நீரில் இருந்து பெரிய அளவிலான மீன்கள் வெளியேறியதை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொதுமக்கள் போட்டி போட்டு பிடித்து மகிழ்ந்தனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் பரவலான மழை பெய்ததாலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததாலும் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 980 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 119 அடியில், தற்போது 81.95 அடியாகவும், கொள்ளளவு 1675 மி.கன அடியாகவும் உள்ளது.
அதேபோல், குப்பனத்தம் அணைக்கு வினாடிக்கு 315 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 28.21 அடியாகவும், கொள்ளளவு 136 மி.கன அடியாகவும் உள்ளது. மிருகண்டா அணைக்கு வினாடிக்கு 259 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 19.68 அடியாகவும், கொள்ளளவு 68.87 மி.கன அடியாகவும் உள்ளது. செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 88 கன அடி நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 44.84 அடியாகவும், 134.37 மி.கன அடியாகவும் உள்ளது.