*கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.20 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
ேதசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, 1 வயது முதல் முதல் 19 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், குடற்புழு நீக்க (அல்பெண்டசோல்) மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குடற்புழு நீக்க மாத்திரைகளை, பள்ளி மாணவர்களுக்கு வழங்கி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட 7,32,172 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 2,87,998 பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமில் பெற இயலாதவர்களுக்கு, வரும் 30ம் தேதி வழங்கப்படும். இப்பணியில், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மிகி கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு 400 மி.கி கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும் வழங்கப்படுகிறது. குடற் புழுத் தொற்றினால், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு மற்றும் சுகவீனம், பசியின்மை, ரத்த சோகை போன்ற பாதிப்புகளை இந்த மாத்திரைகள் தடுக்கிறது.
குடற்புழு நீக்கம் செய்யப்படுவதால், குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை பாதிப்பு தடுக்கப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, அறிவுத்திறன் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழி ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மொழிபாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை
மேலும், வகுப்பறைக்கு சென்று, மாணவர்களின் கற்றல் திறன்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். மேலும், ஆரம்ப கல்வியில் மாணவர்கள் பிழையின்றி எழுதவும், படிக்கவும் கற்றுக்கொண்டால், உயர்கல்விக்கான அடித்தளம் சிறப்பாக இருக்கும். எனவே, ஆசிரியர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றார். குறிப்பாக, மொழிப் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.