சென்னை: சென்னை மாவட்ட கோயில்கள் சார்பில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 20 ஜோடிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறையின் அறிவிப்பின்படி திருமண மண்டபத்தில் 20 ஜோடிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 4 கிராம் தங்க மாங்கல்யத்துடன், கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, மிக்சி என 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, அறநிலையத்துறை செயலாளர் மணிவாசன், ஆணையர் முரளீதரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.