திருவனந்தபுரம் : கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. திருவனந்தபுரத்தில் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது.
திருவனந்தபுரம், எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது.
ெநய்யாறு,அருவிக்கரை,பேப்பாறை ஆகிய அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் மேலும் 4 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இன்று கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.