திருவனந்தபுரம்: கடல் நடுவே கப்பலில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போர் விமானம் நேற்று இரவு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள கடல் எல்லை அருகே இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான விமானம் தாங்கி போர்க்கப்பல் நேற்று முன்தினம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சில போர் விமானங்களும் அந்தக் கப்பலில் இருந்து பறந்து சென்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன.
இந்நிலையில் கப்பலில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானம் வானில் சீறிப்பறந்த நிலையில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீண்டும் கப்பலில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வட்டமிட்டு பறந்தும் அந்த விமானத்தை கப்பலில் இறக்க முடியவில்லை. இதனால் விமானத்தில் இருந்த எரிபொருள் மொத்தமும் காலியானது. இதைத் தொடர்ந்து அவசரநிலை கருதி அருகிலுள்ள திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அந்த போர் விமானத்தை தரையிறக்க தீர்மானிக்கப்பட்டது.
உடனடியாக அந்த போர் விமானத்தில் இருந்த பைலட்டுகள் திருவனந்தபுரம் விமானநிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறி விமானத்தை தரையிறக்குவதற்கு அனுமதி கேட்டனர். இதையடுத்து போர் விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் அந்த போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர் விமானத்தில் எரிபொருளை நிரப்ப அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரம் விமானநிலைய அதிகாரிகள் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உள்துறை அமைச்சகம் எரிபொருள் நிரப்ப அனுமதி அளித்தது. ஆனால் விமானம் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இங்கிலாந்து நாட்டு போர் விமானம் திருவனந்தபுரம் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.