திருவனந்தபுரம்: இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 3 வாரங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் தரை இறங்கிய இங்கிலாந்து நாட்டு போர் விமானத்தை பழுது பார்ப்பதற்காக லண்டனில் இருந்து நேற்று 17 இன்ஜினியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் வந்தனர்.
கடந்த மாதம் 14ம் தேதி இந்திய பெருங் கடல் பகுதியில் இங்கிலாந்து நாட்டு போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. விமானம் தாங்கி கப்பலில் இருந்து இந்த போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது பலத்த காற்று மற்றும் மழையால் ஒரு எப்35 பி ரக போர் விமானத்தால் மீண்டும் கப்பலில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்ததால் எரிபொருளும் குறைந்தது. இதனால் இந்த விமானம் அவசரமாக அருகிலுள்ள திருவனந்தபுரம் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அப்போது அந்தப் போர் விமானத்தின் ஹைட்ராலிக் இயக்கத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
ஆனாலும் அந்த விமானத்தை விமானி பத்திரமாக தரையிறக்கினார். இதன்பிறகு இந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்வதற்காக இங்கிலாந்தில் இருந்து இன்ஜினியர்கள் வந்தனர். ஆனால் அவர்களால் கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த போர் விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கோளாறை சரி செய்வதற்காக லண்டனில் இருந்து இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த 17 இன்ஜினியர்கள் அடங்கிய ஒரு குழுவினர் இங்கிலாந்து ராணுவத்தின் ஏர்பஸ் 400 ரக விமானம் மூலம் நேற்று திருவனந்தபுரம் வந்தனர். இவர்கள் நேற்றே விமானத்தை பழுது பார்க்கும் பணியை தொடங்கினர். கோளாறை சரி செய்ய முடியாவிட்டால் இந்த விமானத்தின் சிறகுகளை நீக்கி மீதமுள்ள பாகங்களை சரக்கு விமானத்தில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.