திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி மேலும் ஒரு படகு கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். கேரளாவில் முதலபொழி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 16 பேர் படகில் மீன்பிடிக்க சென்றபோது துறைமுகம் முக துவாரத்தில் இருந்து எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுப்பட்டு இருந்த கடலோர பாதுகாப்பு குழுவினர் உயிருக்கு போராடிய அனைவரையும் மீட்டனர்.
விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனிடையே முதலபொழி மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக மீனவர்கள் புகார் கூறினர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 முறை படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கடந்த மாதம் மீனவர்கள் சென்ற படகு அலையில் சிக்கி கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர். அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பதால் துறைமுக முகத்துவரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.