சென்னை: தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் திருநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிட்ட நிகழ்ச்சி நிறல் பத்திரிக்கையின் முகப்பு பக்கத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி உடை அணிவித்தும், ருத்ராட்சை மாலை, விபூதி, குங்குமத்துடன் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதேநேரம், தமிழ்நாடு அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்திற்கு மாற்றாக கவர்னர் ஆர்.என்.ரவி திருவள்ளுவருக்கு சாதி, மதம் சாயம் பூசுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. இருந்தாலும் கவர்னர் மாளிகை வெளியிட்ட நிகழ்ச்சி நிரல் பத்திரிக்கையில் திருவள்ளுவர் படத்திற்கு எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் இருந்தது. இந்நிலையில் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வெளிட்ட கவர்னர் மாளிகையின் செயலை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு நேற்று காலை முதல் தடுப்புகள் அமைத்து உதவி கமிஷனர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேநேரம் கவர்னர் மாளிகை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் சென்றாலும், வாகனங்களில் சுற்றினாலும் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அனுப்பி வைக்கின்றனர்.