Sunday, April 14, 2024
Home » திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்: பாஜ, பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் களம் இறங்கினர்

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ தேமுதிக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்: பாஜ, பகுஜன் சமாஜ் வேட்பாளர்களும் களம் இறங்கினர்

by Ranjith

திருவள்ளூர்: நடைபெற நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து கடந்த 20ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் 24 வரை 5 நாட்களாக ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் நேற்று 25ம் தேதி திருவள்ளூர் (தனி) பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.நல்லதம்பி,

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பி.வி.ரமணா, மாதவரம் வி.மூர்த்தி, எஸ்.அப்துல்ரஹீம், முன்னாள் எம்பி பி.வேணுகோபால், அமைப்பு செயலாளர் திருவேற்காடு பா.சீனிவாசன், மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன், தேமுதிக மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் திருவள்ளூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். பிறகு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான த.பிரபுசங்கரிடம் தேமுதிக வேட்பாளர் கு.நல்ல தம்பி வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து பாஜக சார்பில் போட்டியிடும் பொன் வி.பாலகணபதி கூட்டணி கட்சியினருடன் இணைந்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் பாமக மாநில நிர்வாகி கே.என்.சேகர், கிழக்கு மாவட்ட செயலாளர் வி.எம்.பிரகாஷ், அமமுக மாவட்ட செயலாளர் தண்ணீர்குளம் டி.ஏ.ஏழுமலை, பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெ.லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது பாமக மாவட்ட செயலாளர் இ.தினேஷ் குமார்,

பாஜக மாவட்ட தலைவர் எம்.அஸ்வின் (எ) ராஜசிம்ம மகேந்திரா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த பிரியா, ஏ.ராஜ்குமார், எம் பாஸ்கர், ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், கீதாஞ்சலி சம்ப, ஜெ.மாலினி ஜெயச்சந்திரன், ரா.கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன் சீனிவாசன், லயன் பன்னீர் செல்வம், சி.பி.ரமேஷ்குமார், மண்டல் தலைவர்கள் சுரேஷ், சதீஷ், பழனி உள்பட பலர் உடனிருந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளர் வழக்கறிஞர் டி.தமிழ்மதி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான த.பிரபுசங்கரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் மாநில செயலாளர் புழல் பெரியாரன்பன், மாவட்ட தலைவர் கீழானூர் எம்.பிரேம், வெள்ளானூர் வெங்கட், அலுவலக செயலாளர் அம்பேத் ஆனந்த், மாவட்ட பொது செயலாளர் புங்கத்தூர் டி.தேவா ஆகியோர் உடனிருந்தனர்.

* பெண் எம்பியிடம் தவறாக நடந்து கொண்டே வீடியோ
நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் பெண் ராஜ்யசபா எம்பியிடம் பாஜ வேட்பாளரான பொன் வி.பாலகணபதி தவறாக நடந்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலானதால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படுமா என்று கேட்டதற்கு, இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரித்து வெளியிட்ட வீடியோ அது. அந்த வீடியோவால் தனது வெற்றிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதேபோல் தொகுதி மக்களுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்துவது என்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை நன்கு அறிந்தவன் என்பதால் தான் வெற்றி பெற்றதும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு திருவள்ளூர் தொகுதியை நம்பர் ஒன் தொகுதியாக மாற்றுவேன் என்றார்.

* 20 நிமிடம் வாசலில் காத்திருந்த எல்.கே.சுதீஷ்
சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் ஜே.என்.சாலையில் சென்று கொண்டிருந்தபோது தேமுதிக, பாஜக, பிஎஸ்பி போன்ற கட்சிகள் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக காரில் வந்தவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் கடும் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் காரில் வந்த எல்.கே.சுதீஷ் திருவள்ளூர் தலைமை தபால் நிலையத்திலிருந்து வர முடியாமல் தவித்தார்.

இதனையடுத்து பூண்டி ஒன்றிய தேமுதிக செயலாளர் புதூர் பாலாஜியின் மோட்டார் சைக்கிளில் ஜெ.என்.சாலை, லட்சுமிபுரம், புங்கத்தூர், ஜெயாநகர், சேலை ரோடு, சிவிஎன் சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். ஆனால் ஏற்கனவே தேமுதிக வேட்பாளருடன் 4 பேர் சென்று விட்டதால் போலீசார் எல்.கே.சுதீஷை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் எல்கே சுதீஷ் கலெக்டர் அலுவலக வாசலில் 20 நிமிடமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காத்துக் கொண்டிருந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா விரைந்து வந்து போலீசாருடன் பேச்சு வார்த்தை நடத்தி ஏற்கனவே 4 பேரை அழைத்துச் சென்றவர்களில் ஒருவரை உள்ளே அழைத்துச் செல்லாமல் வெளியே அனுப்பி வைத்து விடுகிறோம். இவரை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார். அதன் பேரில் 20 நிமிடம் கழித்து தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனு தாக்கல் முடிந்ததும் தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக தலைமையிலான வெற்றிக்கூட்டணி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். விருதுநகரில் பாஜக சார்பில் ஸ்டார் வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, தேமுதிக வேட்பாளர் விஜயகாந்தின் மகனான பிரபாகரனும் ஸ்டார் வேட்பாளர் தான். நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi