திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஆன்லைன் டிரேடிங்கால் 15 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதால், மனமுடைந்த இரும்புகடை ஊழியர் 6 வயது மகளுடன் விரைவு ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (38). இவரது மனைவி வாணி. இவர்களது மகள் சாஸ்விகா (6). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். லோகநாதன், திருவள்ளூர்-காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள கட்டுமான இரும்பு கம்பிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவர், ஆன்லைன் டிரேடிங் மூலம் பொருள் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். ஆன்லைன் டிரேடிங் மூலம் செய்து வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
டிரேடிங் தொழில் செய்வதற்காக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த தொழிலில் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். ரூ.15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதுகுறித்து மனைவியிடம் கூறியபோது, நீங்கள் வருத்தப்படவேண்டாம், பார்த்துகொள்ளலாம் என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது மகள் சாஸ்விகாவிடம் வெளியில் சென்றுவிட்டு வருவோம் என கூறி புட்லூர் ரயில்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கடையில் சாப்பிட்டுவிட்டு இருவரும் ரயில்நிலையத்தில் வெகுநேரம் இருந்துள்ளனர். இரவு 11 மணி அளவில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற விரைவு ரயில் முன் திடீரென மகளுடன் லோகநாதன் பாய்ந்துள்ளார்.
இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பாலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருவள்ளூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் டிரேடிங்கால் ஏற்பட்ட நஷ்டத்தில் மகளுடன் தந்தை ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்த சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.