திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2023-24ம் ஆண்டின் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வருகின்ற அக்டோபர் 12, 13 ஆகிய நாட்களில் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கலைக்கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்கள், வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் இருவர் இதற்கு முன்னர் இப்பயிற்சிகளில் பங்கேற்காத உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் நிலையில் உள்ள பணியாளர்கள் ஆகியோர் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சி மொழித் திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே சுருக்கொப்பம், ஒப்பமிடுதல் வேண்டும் உள்ளிட்ட அனைத்து நிலைகளுக்குமான ஆட்சி மொழி திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்பெறும். ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கில் கோட்டம், மாவட்டம், வட்டம் மற்றும் சார்நிலைகளில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அவசியம் பங்கேற்று பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.