திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும், அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை பாமக வரவேற்றது. ஆனால், இந்த திட்டத்தை அரசு நிலங்களில் செயல்படுத்துவதற்கு பதிலாக சென்னைக்கு அருகில் விளைநிலங்களில் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
அதற்காக ஊத்துக்கோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களிலிருந்து 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவற்றில் அரசு புறம்போக்கு நிலங்கள் 556 ஏக்கர் தவிர மீதமுள்ள 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களாகும். அதன்படி, கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு ஓர் ஏக்கருக்கு ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஓர் ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித் தரும் நிலங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ரூ.15 லட்சம் விலை வழங்குவது என்பது உழவர்களையும், அவர்களின் உடமைகளையும் சுரண்டும் செயலாகும். தொழில்துறை, கல்வித்துறை, விளையாட்டுத் துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்காகவும் வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், வேளாண் தொழிலும், உணவுப் பாதுகாப்பும் என்னவாகும் என்பதை உணராமலேயே அரசு நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.