திண்டிவனம்: சென்னையில் 3 நாள் முகாமிட்டு தைலாபுரம் திரும்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், திருவள்ளூர், கடலூர், நாமக்கல், ஈரோடு உள்பட 15 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து மீண்டும் அதிரடியில் இறங்கியுள்ளார். மேலும் சமூக நீதிப் பேரவை மாநில தலைவரும், அன்புமணியின் நெருங்கிய ஆதரவாளருமான வழக்கறிஞர் பாலுவையும் நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையிலான கூட்டணி புகைச்சல், மாநில இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தன் நியமிக்கப்பட்ட நாளில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு மேடையிலே பூதாகரமாக வெடித்தது.
சீனியர் தலைவர்கள் தலையிட்டு சமரசம் மேற்கொண்டும் தந்தை, மகன் மோதல் முடிவுக்கு வராததால் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் விரக்தியடைந்தனர். இதனிடையே கடந்த 5ம்தேதி அன்புமணி தைலாபுரம் வந்தும் ராமதாஸ் இறங்கி வராததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அன்புமணி இறுகிய முகத்துடன் தோட்டத்தை விட்டு வெளியேறிய நிலையில் பாஜ தூதரான ஆடிட்டர் குருமூர்த்தியும், சைதை துரைசாமியும் ராமதாசை சந்தித்து 3 மணி நேரம் அன்பாகவும், மிரட்டியும், உருட்டியும் பேசினர்.
இதனிடையே கடந்த 7ம்தேதி திடீரென ராமதாஸ் மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை பார்த்துவிட்டு வரப்போவதாக கூறி சென்னை புறப்பட்டு சென்றார். அங்கு ஆடிட்டர் குருமூர்த்தியை அவர் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகின. மேலும் கட்சியிலும், கூட்டணி விவகாரத்திலும் ராமதாஸ் சில முக்கிய முடிவுகளை எடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எல்லாவற்றிற்கும் தீர்வு கிடைக்கும். அது கட்சிக்கும் நாட்டுக்கும் சரியான தீர்வாக இருக்கும் என கூறியதோடு தொண்டர்கள் எப்போதும் என் பக்கம் தான். அவர்களின் முன்னேற்றத்துக்காக எதையும் செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக தைலாபுரத்தில் இருந்து சென்னை செல்லும்போது 9ம்தேதி தைலாபுரம் திரும்புவேன். 10ம்தேதி உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன் என ராமதாஸ் கூறியிருந்த நிலையில், செய்தியாளர்களை நேற்று அவர் சந்திக்கவில்லை. இதனால் கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு வருகிற வியாழக்கிழமை (12ம்தேதி) அவர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார் என தோட்டத்து வட்டாரத்தில் தகவல் பரவின. இந்த நிலையில் நேற்று பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் மற்றும் சில நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்து சிறிதுநேரம் ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து மற்ற பிரிவுகளின் நிர்வாகிகள் ஒவ்வொருவராக தைலாபுரம் வந்தனர். ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்புக்குபின் கடந்த சில நாட்களாக கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மாற்றம், நீக்கம் தொடர்பாக எந்த அறிவிப்பும் மேற்கொள்ளாமல் இருந்த ராமதாஸ், திருவள்ளூர், கடலூர், மத்திய சென்னை (மேற்கு), கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம் உள்பட 15 மாவட்ட செயலாளர்கள், 13 மாவட்ட தலைவர்களை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து அதற்கான பட்டியலை வெளியிட்டு மீண்டும் அதிரடி நடவடிக்கையை தொடங்கினார்.
பாமக மாநில துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்எல்ஏ ரவிராஜை, ராமதாஸ் நியமித்தார். இவர் பாமகவிலிருந்து பாஜகவுக்கு சென்றுவிட்டு மீண்டும் பாமகவுக்கு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டது. இதேபோல் மாநில பாமக இளைஞர் சங்க செயலாளராக இருந்த பொன்.கங்காதரன் நீக்கப்பட்டு, மின்னல் மூர்த்தி நியமிக்கப்பட்டார். மேலும் பாமக சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவரான பாலுவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக வழக்கறிஞர் கோபி என்பவரை புதிய தலைவராக நியமித்து ராமதாஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
அன்புமணியின் தீவிர ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு, நீண்டநாட்களாக தைலாபுரம் வராமல் இருந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற சமூக நீதிப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பி அன்புமணி நடத்திய கூட்டங்களில் பங்கேற்றார். இதனால் அவரது பதவியும் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். ராமதாசின் இந்தநடவடிக்கையால் பாமகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாமகவின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கிவிட்டு மன்சூர் உசேனை ராமதாஸ் நியமித்திருந்தார். ஆனால் திலகபாமாவே அந்த பதவியில் தொடர்வார் என அன்புமணி கூறியிருந்தார். ஆனால் நேற்றைய தினம் ராமதாஸ் வெளியிட்ட நிர்வாகிகள் நியமன கடிதத்தில் பொருளாளர் சையத் மன்சூர் உசேன் என்றும், அதேபோல் அன்புமணியை செயல் தலைவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் அன்புமணி மீண்டும் தலைவர் என்ற கேள்வியே பாமகவில் எழாதபடி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ராமதாஸ்.
அதிலும் குறிப்பாக ஆடிட்டர் குருமூர்த்தியுடனான சந்திப்புக்குபின் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவரான பாலு உள்ளிட்டோரை நீக்கி புதிய நிர்வாகிகளை மீண்டும் தடாலடியாக நியமித்து வருவதன்மூலம் அவரது கை ஓங்கியிருப்பது உறுதியாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். ராமதாசின் இந்நடவடிக்கையால் அன்புமணியின் ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அவரது ஆதரவாளர்கள் வகிக்கும் பொறுப்புகள் விரைவில் பறிக்கப்படலாம் என்றே தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாமகவில் 27 மாவட்ட செயலாளர்கள், 14 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இதுவரை 49 மாவட்ட செயலாளர்கள், 27 மாவட்ட தலைவர்களை ராமதாஸ் புதிதாக நியமித்துள்ளார். இது கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* 108 தேங்காய் உடைத்து பாமகவினர் வழிபாடு
தந்தை, மகன் மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் நிர்வாகிகளை மாற்றி ராமதாசும், அவரது ஆதரவாளர்களை நீக்கி அன்புமணியும் அதிரடி காட்டியதால் பாமகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதனிடையே கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பாமக நகர செயலாளர் இளையராஜா தலைமையில் அக்கட்சியினர் அங்குள்ள பூவராக சுவாமி கோயிலில் நேற்று 108 தேங்காய்கள் உடைத்து, அர்ச்சனை செய்ததோடு ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் ஒன்று சேர்ந்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
* புதிய மாவட்ட செயலாளர், தலைவர்கள் விவரம்
மாவட்ட செயலாளர்கள்:
1. நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் ரமேஷ் நீக்கப்பட்டு மனோஜ்குமார் நியமனம்.
2. கிழக்கு மாவட்ட செயலாளர் பொன்னுசாமி நீக்கப்பட்டு மோகன்ராஜ் நியமனம்.
3. மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முத்துராமன் நீக்கப்பட்டு ஞானசேகரன் நியமனம்.
4. திருவண்ணாமலை மேற்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் நீக்கப்பட்டு இரா.குட்டி என்கிற பவுன்குமார் நியமனம்.
5. தெற்கு மாவட்ட செயலாளராக பக்தவசலம் நீக்கப்பட்டு ஜானகிராமன் நியமனம்.
6. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் நீக்கப்பட்டு பப்லூ நியமனம்.
7. ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா நீக்கப்பட்டு ஞானவேல் நியமனம்.
8. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் நீக்கப்பட்டு கோவிந்தசாமி நியமனம்.
9. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் திலீப்குமார் நீக்கப்பட்டு ராஜேந்திரன் நியமனம்.
10. திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் கருணாநிதி நீக்கப்பட்டு மனோகரன் நியமனம்.
11. திருச்சி மேற்கு மாவட்ட செயலாளராக சுந்தரம் நியமனம்.
12. காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளரான அரிகிருஷ்ணன் நீக்கப்பட்டு சுரேஷ் நியமனம்.
13. மேற்கு மாவட்ட செயலாளரான மகேஷ்குமார் நீக்கப்பட்டு ஸ்ரீதர் நியமனம்.
14. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக தாஸ் நியமனம்.
15. திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளராக சிவா நியமனம்.
மாவட்ட தலைவர்கள்:
1. திருப்பத்தூர் மேற்கு மாவட்ட தலைவராக தமிழரசி அன்புசக்தி நியமனம்.
2. திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தலைவராக சுமன் நியமனம்.
3. தி.மலை தெற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை நீக்கப்பட்டு ராஜீவ்காந்தி நியமனம்.
4. திருச்சி புறநகர் மாவட்ட தலைவராக ஹரிகிருஷ்ணன் நியமனம்.
5. நாமக்கல் மத்திய மாவட்ட தலைவரான தினேஷ் பாண்டி நீக்கப்பட்டு பிரதாப் நியமனம்.
6. கிழக்கு மாவட்ட தலைவராக பொன்.முருகேசன் நியமனம்.
7. கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தலைவராக இருந்த கோவிந்தராஜிலு நீக்கப்பட்டு ரமேஷ் நியமனம்..
8. கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த பாலசக்தி நீக்கப்பட்டு பாண்டியன் நியமனம்.
9. கடலூர் வடக்கு மாவட்ட தலைவராக இருந்த கவுரிசங்கர் நீக்கப்பட்டு கதிவரன் நியமனம்.
10. ஈரோடு மாநகர மாவட்ட தலைவரான பிரபு நீக்கப்பட்டு பரமேஸ்வரன் நியமனம்.
11. கிழக்கு மாவட்ட தலைவராக குப்புசாமி நியமனம்.
12. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவரான உமாபதி நீக்கப்பட்டு சேஷாத்ரி நியமனம்.
13. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவராக கேசவன் நியமனம்.
இதுதவிர மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக ஆத்தூர் கோபால் கண்ணன் நியமனம். திருவள்ளூர் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளராக வழக்கறிஞர் ராசா சங்கர் நியமனம். மாநில துணைத்தலைவராக கள்ளக்குறிச்சி பாண்டியன் நியமனம். மாநில வன்னியர் சங்க துணை தலைவராக கள்ளக்குறிச்சி எஸ்.டி.ராமு, மாவட்ட செயலாளர்களாக கள்ளக்குறிச்சி மேற்கு வெங்கடேசன், நாமக்கல் மத்தி விஸ்வநாதன், கடலூர் வடக்கு வினோத் ஆகியோரும், மாவட்ட தலைவர்களாக கள்ளக்குறிச்சி மேற்கு நாராயணன், நாமக்கல் கிழக்கு திருப்பதி, மாவட்ட பொருளாளராக கடலூர் கிழக்கு ஆதி சிவகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பப்லூ மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவருக்கும் பதவி அளிக்கப்பட்டுள்ளது.