திருவள்ளூர்: திருவள்ளூரில் சாலை விரிவாக்கத்திற்காக அரசு கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு பணம் ரூ.45 லட்சத்தை விடுவிக்க 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சன் மற்றும் இரண்டு இடைத்தரகர்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்னொரு முதல் மகாபலிபுரம் வரை செல்லும் சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகை அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பகுதியில் இயங்கி வரும் வேல்யூ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்திய அரசு அதற்காக சுமார் 45 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்க வேண்டி இருந்தது. இந்த தொகையை பலமுறை நில எடுப்பு தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனிடம் அந்த நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் என்பவர் கேட்டும் அவர் காலதாமதம் செய்து வந்த நிலையில் சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் நிலம் கையகப்படுத்தியதற்கான இழப்பீட்டுத் தொகை ரூ.45 லட்சத்தை விடுப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தின் மேலாளர் ஆஸ்டின் ஜோசப் லஞ்ச ஒழிப்பு துறைக்கு அளித்த புகாரின் பேரில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் வழிகாட்டுதலின் படி முதல்கட்டமாக ரசாயனம் தடவிய 75 ஆயிரம் ரூபாயை தனி வட்டாட்சியர் எட்வர்ட் வில்சனுக்கு ஏஜென்ட்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் வெள்ளத்துரை ஆகியோரிடம் வேல்யூ ஸ்பேஸ் கம்பெனி நிறுவன ஊழியர் கொடுத்த போது மறைந்திருந்த ஆய்வாளர் மாலா ஆகியோர் தலைமையிலான போலீசார் தனி வட்டாட்சியரை பிடித்து கைது செய்து தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவருக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்ட 75 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏஜென்ட்களாக செயல்பட்ட கோமதிநாயகம் மற்றும் துறை ஆகியோரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இதுவரை அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இதுபோன்று எவ்வளவு ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்பது குறித்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.