திருத்தணி, அக்.24: திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறு வரும் கந்த சஷ்டி பெருவிழாவில் மூலவர் மற்றும் காவடி மண்டபத்தில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. இதனால், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலையில் 9 மணி முதல் 11 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா நேற்று முன்தினம் காலை உற்சவர் சண்முகருக்கு லட்சார்ச்சனையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் சிறப்பு பெற்ற புஷ்பாஞ்சலி வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில், இறுதி நாளான 28ம் தேதி காலை உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும்.
கந்த சஷ்டி பெருவிழாவில் மூலவர் கடவுள் மற்றும் காவடி மண்டபத்தில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறுவதால் நேற்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்களுக்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், 11 மணிக்கு மேல் வழக்கம் போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சண்முகருக்கு லட்சார்ச்சனையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று காலை கந்த சஷ்டி விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் தேர் வீதியில் நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பின்னர் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி பெருவிழாவில் 2ம் நாளான நேற்று காவடி மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் சண்முகருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை மற்றும் வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ரூ.250 செலுத்தி லட்சார்ச்சனையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


