நெமிலி: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(44). இவர் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் பங்கேற்க அறிவழகன் குடும்பத்துடன் வந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சேதுபதி(23), பிரதாப்(22) ஆகியோர் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு பைக்கில் வேகமாக வருவதும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியும், கடைக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பதும் என ரகளையில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் திருவிழாவில் குடும்பத்துடன் வந்திருந்த போலீஸ் ஏட்டு அறிவழகனிடம் வாலிபர்கள் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் பணம் தர முடியாது என கூறியுள்ளார். உடனே சேதுபதி, பிரதாப் ஆகியோர் தகராறு செய்து அவரை தாக்கினர். மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏட்டு அறிவழகனின் தலை மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த அறிவழகனை அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டுஅரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் அங்கு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வழக்குப்பதிந்து, போலீஸ் ஏட்டை வெட்டிய சேதுபதி மற்றும் பிரதாப்பை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் திருவிழாவில் ேபாலீஸ் ஏட்டை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறப்பு எஸ்ஐக்கு அரிவாள் வெட்டு
மதுரை, உத்தங்குடியை சேர்ந்தவர் சங்கையா. இவரது மனைவி ஸ்வேதா. குடும்ப தகராறில் கணவரை பிரிந்து ராமநாதபுரத்தில் வசிக்கிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் சங்கையா, தனது தாயார் கண்ணாமணியிடம் தகராறு செய்து, தாக்க முயன்றுள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தனர். சிறப்பு எஸ்ஐ நத்தர் ஒலி வந்து விசாரித்துள்ளார். அப்போது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறி, தாயை சங்கையா தாக்க முயன்றார்.
அவரிடம் காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்குமாறு சிறப்பு எஸ்ஐ நத்தர் ஒலி கூறியுள்ளார். ஆனால் போதை தலைக்கேறிய நிலையில் சங்கையா, அரிவாளை எடுத்து, தாயை வெட்ட முயன்றார். இதனை தடுக்க முயன்ற சிறப்பு எஸ்ஐ நத்தர் ஒலியின் உள்ளங்கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சங்கையாவை பிடித்து, காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மாட்டுத்தாவணி போலீசார் அவரை கைது செய்தனர்.