புழல்: செங்குன்றம், அலமாதி பகுதிகளில் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் – திருவள்ளூர் கூட்டு சாலை முதல் ஆலமரம் பகுதி, காந்தி நகர், பம்மது குளம், கலைஞர் கருணாநிதி நகர், அம்பேத்கர் நகர், எடப்பாளையம், அலமாதி வரை செல்லும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் மாடுகள் சுற்றித்திரிவதும், உறங்குவதாகவும் உள்ளன.
இதனால், இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பைக்கில் செல்பவர்கள் எதிர்பாராத விதமாக சாலையில் நிற்கும் மாடுகள் மீது மோதி விபத்துக்கள் அதிகரிக்கிறது. மேற்கண்ட மாநில நெடுஞ்சாலையில் சாலையின் மையப் பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வந்து செல்லும் வாகன ஓட்டிகள், விபத்துகளில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர்.
எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட பாடியநல்லூர், நல்லூர், பம்மது குளம், அலமாதி ஆகிய ஊராட்சியில் சேர்ந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை சிறைப்பிடித்து, மாட்டு தொழுவத்தில் அடைத்து மாட்டு உரிமையாளர்கள் மீது அபராதம் தொகை விதித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், மாநில நெடுஞ்சாலையில் உள்ள மையப் பகுதிகளில் மின்கம்பங்களை அமைத்து மின்விளக்குகள் எரிய வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.