திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரை அதே ஊரை சேர்ந்த தனுஷ் (எ) ஆதி (19) என்பவர் கடந்த ஏப்ரல் 8ம் தேதி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், புல்லரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தனுஷை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு வீட்டின் வெளியில் சிறுமி படித்து கொண்டிருந்தார்.
பெற்றோர், வீட்டில் இருந்தனர்.
அந்த நேரத்தில், வீட்டுக்கு வந்த தனுஷ் ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி அலறி கூச்சலிடவே பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தனுஷ் ஓட்டம் பிடித்தார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மஸ்ரீபபி மற்றும் எஸ்ஐ சுசீலா ஆகியோர் வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் தனுஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 16 வயது சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.