சென்னை: திருவல்லிக்கேணியில் கடைக்கு சென்ற பள்ளி மாணவியை வளர்ப்பு நாய் கடித்து குதறியது. இதுதொடர்பாக நாயின் உரிமையாளரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலை குதிரத்தலி மக்கான் தெருவை சேர்ந்தவர் தர்மன். இவர் சென்னை மாநகராட்சியின் 129வது வார்டு சுகாதார பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் நடந்து முடிந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால், மீண்டும் தேர்வுக்காக படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி திருவல்லிக்கேணி வெங்கடசாமி தெருவை சேர்ந்த லட்சுமி(42) என்பவர் தனது வளர்ப்பு நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளார். அரசு உத்தரவை மீறி நாயிக்கு வாயில் பாதுகாப்பு சாதனம் பொருத்தாமல் அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமி வீட்டின் அருகே உள்ள கடைக்கு வந்துள்ளார். சிறுமியை பார்த்ததும் வளர்ப்பு நாய் திடீரென சிறுமி மீது பாய்ந்து வலது தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் கடித்து குதறியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி அடித்து சிறுமியை மீட்டனர். பின்னர் காயடடைந்த சிறுமி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை தர்மன் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்று தனது மகளை நாய் கடித்து விட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் நாயின் உரிமையாளர் லட்சுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.