திருத்தணி: சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து திருச்சபைகளில், முதல் சபை ரத்தினசபை என்ற சிறப்பு பெற்றது திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில். திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாளை (12ம் தேதி) இரவு 8.30 மணிக்கு கோயில் ஸ்தல விருட்சம் ஆலமரத்தின் கீழ் ஆருத்ரா மண்டபத்தில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேக பூஜைகள் தொடங்கி, இரவு விடிய விடிய பழங்கள், விபூதி, சந்தனம், கதம்பம், மஞ்சள், தேன், பால், பன்னீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் அபிஷேக பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது. அதிகாலை சிறப்பு மலர் அலங்காரத்தில் நடராஜர் கோபுர தரிசனம் வழங்க உள்ளார். ஆருத்ரா அபிஷேக விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும் திரளான பக்தர்கள், சிவபக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
Advertisement


