சென்னை: திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜா என்பவரின் மகன் தனுஷ் (23). இவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயா ஸ்ரீ (21) என்ற இளம் பெண்ணும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் தேனியில் இருந்து புறப்பட்டு களாம்பக்கத்தில் உள்ள தனுஷ் வீட்டிற்கு வந்துவிட்டார்.
கடந்த மாதம் 15ம் தேதி காதல் திருமணம் செய்துகொண்டு தனுஷ் – விஜயா ஸ்ரீ ஆகிய இருவரும் நண்பர் ஒருவர் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் காரில் வந்த ஒரு கும்பல் காதல் ஜோடி இருக்கும் இடத்தை காண்பிக்குமாறு களாம்பாக்கம் வீட்டில் இருந்த தனுஷின் தம்பி இந்திரசந்த் (16) என்ற சிறுவனை கடத்திச் சென்றது. இதனால் பயந்து போன தனுஷின் தாயார் லஷ்மி 100க்கு போன் செய்து தனது மகன் இந்திரசந்த்தை காரில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டதாக புகார் செய்துள்ளார்.
அதன்பேரில் திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வனராஜா (55), மணிகண்டன் (49), கணேசன் (47) ஆகிய 3 பேரையும் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்து திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் சிறுவன் கடத்தல் சம்பவத்தில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ இந்த சம்பவத்தில் தலையிட்டு பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்ய திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் திருவள்ளூர், வெள்ளவேடு, நாசரத்பேட்டை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் பூந்தமல்லி அடுத்த ஆண்டரசன்பேட்டையில் உள்ள பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ வீட்டின் முன்பு நேற்று குவிந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கட்சியின் தொண்டர்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவடி காவல் ஆணையராக கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தீவிரமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தார்.
புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவ்வழியாக கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ வீட்டில் உள்ளாரா என்று சோதனை செய்துவிட்டுச் செல்வதாக போலீசார் கூறினர்.
அதற்கு புரட்சி பாரதம் நிர்வாகிகள் 3 பேர் மட்டும்தான் வீட்டில் வந்து பார்க்க வேண்டும் என்று கூறினர். அதனை ஏற்றுக்கொண்டு, திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் 3 போலீசார் மட்டும் வீட்டிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டினுள் சென்று அனைத்து அறைகளிலும் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ உள்ளாரா என்று சோதனை செய்தனர். அவர் இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அதன் பிறகு அங்கு குவிக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட போலீசார் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.