திருப்புவனம் : திருப்புவனம் அருகே பழையனூர், சொக்கநாத இருப்பு, அல்லிநகரம், மாரநாடு, ஆவரங்காடு, தாலிக்குளம், சல்பனோடை, வேலாங்குளம் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் கோடை கால கத்தரி நடவு செய்வது வழக்கம். அதன்படி, கடந்த மே, ஜூன் மாதங்களில் கத்தரி பயிர் இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை, வளிமண்டலத்தில் நிலவிய கீழடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது.
திருப்புவனம் பகுதியில் 80 மி.மீ வரை மழை பதிவானது. தொடர் மழையின் காரணமாக வயல்வெளியில் தண்ணீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாரான கத்தரி செடிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் செடியின் தண்டுப்பகுதி மற்றும் வேர்ப்பகுதி அழுகியது. விவசாயிகள் மிகுந்த நஷ்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
பழையனூரைச் சேர்ந்த விவசாயி சந்தனம் கூறியதாவது: பழையனூரில் 83 சென்ட் நிலத்தில் கடந்த மே மாதம் கத்தரி நடவு செய்தேன். காத்தரி விதை பாவுதல்,உழவு, நடவு, உரமிடுதல், களையெடுப்பு என இதுவரை 33 ஆயிரம் செலவு வந்து விட்டது. கத்தரிக்காய் அறுவடை செய்ய வேண்டிய நல்ல பருவத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக, கத்தரி செடி முழுவதும் அழுகிப் போனது. இனி வரும் காலங்களில் கத்தரி செடி வளர்ச்சி பெற்று காய்க்கும் என்கிற நம்பிக்கை இல்லை என தெரிவித்தார்.