மதுரை: திருப்புவனம் லாக்அப் மரணம் தொடர்பான கேள்விகளுக்கு டிஜிபி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 போலீஸ்காரர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை உடனடியாக தொடங்கியுள்ளனர். இதனிடையே, போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித் மரண வழக்கு ஐகோர்ட் கிளையில் விசாரணை வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், நீதிபதி மரியா கிளாட் ஆகியோர் அமர்வு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நகை திருட்டு புகார் கொடுக்கப்பட்ட பிறகு ஏன் வழக்கு பதியவில்லை? என்றும் நகை காணாமல்போனது குறித்து எப்போதும் வழக்குப் பதியப்பட்டது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். புகார் அளித்ததும் சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டது; ஜூன் 28ல் வழக்குப் பதியப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது. வழக்கை நீர்த்துப் போகும் வகையில் அரசு செயல்பட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் எனவும் தெரிவித்தனர். இளைஞர் அஜித்குமார் மரண வழக்கின் விசாரணையை பிற்பகல் 3 மணிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைத்து லாக்அப் மரணம் தொடர்பான கேள்விகளுக்கு டிஜிபி பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.