திருவான்மியூர்
பகுதி 5
திருமயிலை, திருவொற்றியூர் ஆகிய தலங்களைத் தொடர்ந்து, கடற்கரையில் அமைந்துள்ள மற்றொரு திருப்புகழ்த் தலமாகிய திருவான்மியூரை அடைகிறோம்.
“கரை உலாங்கடலிற் பொலி சங்கம் வெள்ளிப்பிவன்
திரையுலாங்கழி மீனுகள் உகளுந் திருவான்மியூர்”
கடலின் அலைகள் வலிமையாக வீசிட, சங்குகளும் முத்துச் சிப்பிகளும் மீன்களும் திரண்டு விளங்கும் சிறப்புடைய திருவான்மியூர் என்றும்,
“திரையார் தெண் கடல் சூழ் திருவான்மியூர்” என்றும் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.
இங்குள்ள மருந்தீசர் ஆலயம், பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பர். ஞானசம்பந்தர், நாவுக்கரசர் மற்றும் அருணகிரியாரால் பாடப்பெற்ற சிறப்புடையது. வான்மீகி முனிவர் சிவபெருமானைக் குறித்து தவம் புரிந்து, அவருடைய தரிசனத்தையும் திருவருளையும் பெற்ற இடமாதலால் திருவான்மியூர் என்று பெயர் பெற்றது.வான்மீகி முனிவர் பல சிவஸ்தலங்களைத் தரிசித்த பின் திருவொற்றியூரை வந்தடைந்தார். ஒற்றியூர் அவரை மிகவும் வசீகரித்து விட்டது. அதனால் அங்கு எழுந்தருளியுள்ள மூலஸ்தான லிங்கத்தைத் தம் கையினால் தொட்டுப் பூஜை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சிவனாரிடம் தெரிவித்தார்.
அவரோ, “பிரம்மா, விஷ்ணு முதலியோர் மட்டுமே ஒற்றியூர் படம்பக்க நாதரைப் பூஜிக்கும் வரம் பெற்றுள்ளனர்; நீ தெற்கே பயணம் செய்து வா; தேவர்கள் பாற்கடலில் கிட்டிய அமுதத்தால் பூஜை செய்த லிங்கத்தை அமுதபுரி தலத்தில் காண்பாய்; அங்கே பூஜை செய்து வருவாயாக” என்று கூறினார். முனிவர் அதன்படி ஒற்றியூரிலிருந்து வந்து ஆராதனை செய்து விட்டுத் திரும்புவரானார். வான்மீகி முனிவர் பூஜை செய்ததால், அத்தலம் திருவான்மியூர் என்று பெயர் பெற்றது.
இறைவன் உமையுடனும், தன் பாலகர்களுடனும் அவருக்குக் காட்சி அளித்து, வேண்டிய வரங்களையும் அளித்தார். முனிவரும் இத்தலத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். இறைவன் தன் சிரசிலுள்ள கங்கா நதியிலிருந்து ஐந்து திவலைகளை அருள, அவை ஐந்து தீர்த்தங்களாயின. தற்போது கோயிலருகில் ஒரே ஒரு தீர்த்தம் மட்டுமே எஞ்சியுள்ளது, மற்றவை காலப்போக்கில் காணாமற் போய்விட்டன.
திருவொற்றியூர்ப் புராணத்தில், ‘வான்மீகி முனிவர் நித்தியத்துவம் பெற்ற சருக்கம்’ என்ற பகுதியில், இக்குறிப்பு தரப்பட்டுள்ளது.காமதேனு பால் பொழிந்து அபிஷேகம் செய்த காரணத்தினால் வான்மியூர் ஈசன் – பால்வண்ணநாதர் என்று பெயர் பெற்றார். சதயூ என்ற அரசன் ஒரு முறை வேட்டையாடச் சென்ற போது ஒரு சிங்கத்தைத் துரத்த, அது காமதேனு லிங்கத்துடன் வீற்றிருந்த புதருக்குள் சென்றுவிட்டது. காமதேனு, சிங்கத்தைத் தன் கொம்புகளால் குத்திக் கிழித்துக் கொன்றுவிட்டது.
சிங்கத்தைக் கொன்ற பசுவைத் தேட போர்வீரர்களை அனுப்பினான் அரசன். அவர்களுடன் போரிட்ட காமதேனு, தனது குளம்படிகள் லிங்கத்தின் மேல் காயங்களை ஏற்படுத்தியது கண்டு பெரும் துன்பமுற்றது. ஆனால், இறைவன் அதை மன்னித்து ஏற்று, “உன் குளம்படி நம் கந்தனுடைய பொன்னடியாகவே ஆயிற்று; நீ தினமும் பால் பொழிந்த காரணத்தினால் எம் பெயர் ‘பால்வண்ணநாதர்’ எனப்படும்” என்று கூறி ஆசீர்வதித்தார். (மூலவரின் சிரசிலும் மார்பிலும் குளம்புத் தழும்புகள் உள்ளன).
வேதங்கள் அனைத்தும் பால்வண்ணநாதரை வணங்கியதால் அருகிலுள்ள தலம் வேதசிரோணி எனப்பட்டு, பின்னர் வேளச்சேரி என்று வழங்கலாயிற்று. அகத்தியர் சிவனைத் துதித்த போது இறைவன் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அவருக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “இந்தப் புவனத்தில் இயற்கையாகவே உண்டாகும் ஔஷதிகள் முதலியவற்றின் தன்மைகளையும் வகைகளையும் அறியவும், இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று நான் உணரவும் அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார் அகத்தியர். “அவ்வாறே உனக்கு ஞானம் உண்டாகுக” என்று அருளிய இறைவன் அவருக்கு ஔஷதங்கள் பற்றிய பல முக்கிய குறிப்புகளையும் கூறி அருளினார்.
இதனால் இறைவனுக்கு ஔஷதீஸ்வரர், மருந்தீஸ்வரர் என்ற பெயர்கள் உண்டாகி, இன்று மருந்தீஸ்வரர் எனும் பெயரே வழக்கத்தில் நிலவுகிறது. முதலாம் ராஜேந்திரன் தனக்கு ஏற்பட்ட நோய் தீர வேண்டி, சில காலம் இங்கு தங்கி, மருந்தீஸ்வரரை வழிபட்டு, நோய் நீங்கப் பெற்றான் என்று கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது.வான்மீகி முனிவருக்கு வேண்டிய வரங்களை அளித்த சிவபெருமான், “முனிவ! இத்தலத்தில் ஐந்து வகைத் தீர்த்தங்களாகத் தோன்றி யாவருக்கும் அருள் காட்ட எம் சிரசிலுள்ள கங்கா நதியிலிருந்து அருளுகின்றோம். அவை கிழக்கே ஜன்மநாசினி என்றும், தெற்கே காமநாசினி என்றும், மேற்கே பாபநாசினி என்றும் வடக்கே ஞானதாயினி என்றும் நடுவில் மோட்சதாயினி என்றும் பெயர் பெற்று ஐந்து தீர்த்தங்களாக
அமையும்” என்று கூறி அருளினார்.
[இப்போது கோயில் முன்பு அமைந்துள்ள குளம் தவிர வேறு இல்லை]
கிழக்கு கோபுரம் ராஜ கோபுரம்; ஐந்து நிலைகளை உடையது. கோபுர வாயிலில் உள்ளே நுழைந்தால் நேரே வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியரின் தனிச் சந்நிதி உள்ளது. முகப்பில் கமல விநாயகரும், அருகில் விஜய கணபதியும் உள்ளனர்.முருகனை வணங்கி, தலத் திருப்புகழை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
குசமாகி ஆருமலை மரைமா நுணூலினிடை
குடிலான ஆல்வயிறு குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமுகாருமலர்
குழல் காரதான குணமிலிமாதர்
புச ஆசையால் மனது உனை நாடிடாதபடி
புலையேன் உலாவி மிகு புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயிறாத வகை
பொலிவான பாதமலர் அருள்வாயே
நிச நாரணாதி திருமருகா உலாசமிகு
நிகழ் போதமான பர முருகோனே
நிதி ஞானபோதம் அரன் இருகாதிலே உதவு
நிபுணா நிசாசரர்கள் குல காலா
திசைமாமுகாழி அரி மகவான் முனோர்கள் பணி
சிவநாதர் ஆலம் அயில் அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடம் உயர்
திருவான்மியூர் மருவு பெருமாளே
“புகழான பூமிமிசை மடிவாயிறாத வகை பொலிவான பாதமலர் அருள்வாயே” என்று முருகனை வேண்டுகிறார்.மலை போன்ற கொங்கைகள், தாமரையின் நுண்ணிய நூல் போன்ற இடை, கருவிற்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு, மீன் விழிகள், மதி போன்ற முகம், பூ நிறைந்த கூந்தல் இவை உடைய பொது மாதரின் தோள்கள் மீதுள்ள ஆசையால் என் மனம் உனை நாடுவதில்லை. இத்தகைய நீசனாகிய நான் அவ்வழிகளிலே நாட்டம் உடையவனாகி இப்புகழ் பெற்ற பூமியிலே பிறந்து, அழிந்து போகாத வண்ணம், உனது அழகுமிக்க திருவடித் தாமரைகளைத் தந்தருள்வாயாக.புராணக் குறிப்புகள் நிறைந்த பாடலின் பிற்பகுதியைச் சற்று விரிவாகக் காணலாம்.
நிச நாரணாதி திரு மருகா:
மெய்யான நாராயண மூர்த்தியாம் தலைவனது அழகிய மருகனே! அல்லது நாராயணன், லட்சுமி ஆகியோரது மருகனே!
உலாசமிகு நிகழ் போதமான பர முருகோனே:
உள்ளக் களிப்பு மிகுந்து உண்டாகும் ஞானமே வடிவமான முருகோனே!
நிதி ஞான போதம் அரன் இரு காதிலே உதவு நிபுணா:
பொக்கிஷம் போன்ற ஞானோபதேசத்தை சிவனாரது இரு செவிகளிலும் பெருமை மிக்க செவியில் உபதேசித்தருளிய சாமர்த்தியனே!
நிசாசரர்கள் குல காலா:
இருளில் சஞ்சரிப்பதால் நிசாசரர்கள் என்றழைக்கப்படும் ராட்சத குலத்திற்கு யமனாக வந்தவனே!
திசை மா முகாழி அரி மகவான் முனோர்கள் பணி:
திசைமாமுகன் [பிரமன்], ஆழி அரி [சக்கரம் ஏந்திய திருமால்], மகவான் [இந்திரன்] ஆகியோர்கள் வணங்கும்…
பிரமன் பூசித்தது:
திருமால் தன் நாபிக் கமலத்தில் தோன்றிய பிரமனை நோக்கி, “நான்கு வேதங்களும் மலைகளாக நின்ற திருக்கழுக்குன்றத்திற்கும், அம்பிகை மயிலாக அமர்ந்து பூஜை செய்த திருமயிலைக்கும் நடுவே, பாலாற்றின் வடக்கே கடற்கரை ஓரமாகத் திருவான்மியூர் எனும் சிவத்தலம் விளங்குகிறது. அத்தலமே உன் தவத்திற்குரியது” என்று கூறியருள, பிரமன், பிரம்ம தீர்த்தம் எனும் தீர்த்தம் உருவாக்கி, மருந்தீசரைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான்.
அவனுக்குத் தரிசனம் அளித்த சிவபெருமானைப் போற்றி, பெரும் விழாக்கள் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தான். “இத்தலத்தில் திருவிழா செய்பவரும், செய்விப்பவரும், தரிசிப்பவரும், எவ்வகையிலாவது உதவி செய்பவரும் சகல செல்வங்களுடன் வாழ்ந்து முக்தி அடைய வேண்டும்” என்று பிரமன் சிவனைப் பிரார்த்திக்க, அவரும் அவ்வாறே வரமளித்து மறைந்தார்.
திருமால் பூசித்தது:
இராமபிரான் சீதையைத் தேடி வனங்களிலெல்லாம் அலைந்து வரும் போது, ஸ்ரீ காளத்தி, வேங்கடம், தணிகை, ஒற்றியூர், மயிலை இவ்விடங்களில் சிவனாரை வணங்கி, சொக்கநாயகியை இடப்பால் கொண்ட மருந்தீசரைத் துதித்து பூஜைகள் செய்தார். அப்போது சிவனார் அசரீரியாக, நீ தென் திசை நாடிச் சென்று தசகண்டனைக் கண்டு அவனுடன் போரிட்டு அவனை வதைத்து, உன் மனைவியுடன் கோசல நாட்டைச் சேர்வாய்” என்று அருள, அவ்வாறே ராமபிரான் ராவணனைச் சங்கரித்து சீதையை மீட்டு நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் என்பது புராணம்.
சித்ரா மூர்த்தி