பகுதி 2
மகவான் பூசித்தது:
இந்திரன், அகிதவுட்டிரன் எனும் அரக்கனிடம் போரிட்டுத் தோற்று, பிருகு முனிவர் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்தான். துரதிருஷ்டவசமாக அவன் முனிவர் மகளிடம் காதல் வார்த்தைகள் பேச, முனிவர் அவனை அரக்கனாகும்படி சபித்துவிட்டார். இந்திரன் காணாம போனதால் தேவர்கள் பூலோகத்திலிருந்து முசுகுந்த சக்கரவர்த்தியை அழைத்து தம்மைக் காக்குமாறு வேண்ட, அவனும் அதிகவுட்டிரனை விரட்டிவிட்டு தேவலோகத்தை ஆண்டு வந்தான். இந்திராணி கணவன் பிரிவினால் வருந்தியது கண்டு, பிரமன் நாரத முனிவரை அழைத்து, “காட்டில் அரக்க உருவத்துடன் அலைந்து கொண்டிருக்கும் இந்திரனைக் கண்டுபிடித்து, அவன் சாபத்தைப் போக்குவீராக” என்றான்.
முனிவர், இந்திர அரக்கனைத் தேடிக் கண்டறிந்து, அவன் மீது கமண்டல நீரைத் தெளித்து அடக்கி, பிடரியைப் பிடித்துத் தள்ளிக் கொண்டுவந்து, திருவான்மியூரை அடைந்து, ஜன்மநாசினித் தீர்த்தத்தில் அவனை அழுத்தினார். உடனே, இந்திரன் அரக்க உரு நீங்கப்பெற்றான். மேனி, முன்னிலும் அதிக ஒளி பெற்றது. நாரதரை வணங்கி, பின்னர் வன்னி மரத்தடியில் ஆர்பவித்திருந்த சிவனாரை வணங்கி, விடைபெற்றான். முசுகுந்தனிடமிருந்து ஆட்சி யைப் பெற்று, முன்போல் ஆண்டுவந்தான்.
சிவநாதர் ஆலம் அயில் அமுதேசர் திகழ் பால:
சிவமூர்த்தி, விஷத்தை உண்டவர், அமுதால் அபிஷேகிக்கப் பட்ட ஈசர், அத்தகு பெருமானது கீர்த்தி மிகு குழந்தையே! சிவபெருமானை அமுதேசர் என்று இங்கு விளிக்கிறார் அருணகிரியார். அதன் பின்னும் ஒரு புராணக் குறிப்பு உள்ளது. தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது, அவ்வமுதத்தாலேயே ஈசனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்தனர் என்றும் அதனாலேயே இத் தல ஈசனுக்கு, “அமுதேசர்” என்ற பெயரும் தலத்துக்கு “அமுதபுரி” என்ற பெயரும் உண்டாயிற்று என்பர். மாகமுற மணி மாளி மாடமுயர் திருவான்மியூர் மருவு பெருமளே என்று பாடலை நிறைவு செய்கிறார் அருணகிரியார்.
ஆகாயத்தை எட்டும்படி அழகிய மாட மாளிகைகள் உயர்ந்துள்ள திருவான்மியூரில் வீற்றிருக்கும் பெருமாளே! மூலவர் மருந்தீஸ்வரர் மேற்கு நோக்கிய சந்நதியில் வீற்றிருக்கிறார். பால் போன்ற வெண்மையான லிங்கம். மேலே விதானம் உள்ளது. சுவாமிக்குப் பால் அபிஷேகம் மட்டுமே உண்டு. பஞ்சாமிர்தம் முதலான அபிஷேகங்கள் ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. சுற்றுப் பிராகாரத்தில் ஏராளமான லிங்கங்கள் உள்ளன.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகிய தெய்வங்களைத் தரிசிக்கலாம். சூரியன் இத்தலத்தில் பெருமானை வழிபட்டதால், பங்குனி உத்திர விழாவில் அர்த்தசாமத்தில் கொடியேற்று விழா நடத்தப்படுகிறது. அறுபத்து மூவர், நால்வர், கஜலட்சுமி ஆகியோரைத் துதித்து, முத்துக்குமரனையும் அருணகிரிநாதரையும் வணங்குகிறோம்.
அம்பாள் சொக்கநாயகி எனப்படும் திரிபுரசுந்தரி தெற்கு நோக்கிய சந்நதி. உள்ளே வலம் வரலாம். கோஷ்டத்தில் மூர்த்தங்கள் இல்லை. கோயிலில் பெரிய தியாகராஜர் மண்டபம் உள்ளது. கிழக்கு நோக்கிய அழகான சந்நதி. கோயிலின் தல விருட்சம் வன்னி. பங்குனிப் பெருவிழாவில், வன்னி மரச் சேவையும், தியாகராஜர் திருக்கல்யாண நடனத்தைக் காட்டி அருளும் ஐதிகமும் விசேஷமாக நடைபெறுகிறது. வன்னி மரம், திருவான்மியூர் தவிர, தென்னகத்தில் 25 திருத்தலங்களில் தல விருட்சமாகத் திகழ்கிறது. வன்னி மரத்தின் கீழ் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து விசேஷமாக வணங்கப்படுகின்றது. திருவான்மியூரில் வன்னி மரத்தடியில்தான் சிவபெருமான், அகத்தியருக்குத் திருமணக் காட்சி அளித்ததாகக்
கூறப்படுகிறது.
சமீ என்கிற வன்னி மரத்தை, விஜய தசமி அன்று பூஜித்தால், தீவினைகள் அகலும். வன்னி என்று நினைத்தாலும் சொன்னாலும் வன்னி மரத்தை வழிபட்டாலும் வலம் வந்தாலும் பாவ வினைகள் அனைத்தும் அகன்றுவிடும். தீராத நோய்கள் குணமாகும். வன்னிமரக் காற்றும் இலைகளும் நம்மேல் பட்டால், சரும வியாதிகள் தீரும். வெப்பத்தைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது. ஹோமம் போன்ற நற்காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஸ்காந்த மஹா புராணத்தில் க்ஷேத்ர காண்டம் பகுதியின் நடுவிலமைந்துள்ள வான்மியூர் பெருமையை தமிழில் பூவை கலியாண சுந்தர முதலியாரவர்கள் 19 படலங்களில் 1022 விருத்தங்களாகப் பாடி 1895 ஆம் ஆண்டு அச்சேற்றியுள்ளார் என்று அறிகிறோம்.
தொகுப்பு: சித்ரா மூர்த்தி