Wednesday, June 25, 2025
Home ஆன்மிகம் திருப்பாவை எனும் தேனமுதம்

திருப்பாவை எனும் தேனமுதம்

by Porselvi

மூன்றாம் பாசுரத்தின் தொடர்ச்சி…

பகுதி 10

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

நாம் இதற்கு முன்பே பார்த்ததுபோல முதல் இரண்டு பாடல்கள் மற்றும் மூன்றாவது பாடலெல்லாம் சேர்த்து பாவை நோன்புக்குரிய சங்கல்ப ரூபமாகத்தான் பார்த்துக் கொண்டே வருகிறோம். இந்தச் சங்கல்பத்தில் வரக் கூடிய முக்கியமான அடுத்த விஷயம் என்னவெனில், என்ன பலன்கள் கிடைக்குமென்பதையும் சொல்கிறாள். ‘சமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம்…’ நம்மைச் சுற்றிலும் இருக்கக்கூடிய தீமைகளெல்லாம் விலக வேண்டும். ‘சமஸ்த மங்கள வாப்யர்த்தம்…’ சகல மங்களங்களும் வர வேண்டும். தர்ம, அர்த்த, காம, மோட்ச சதுர்வித பல புருஷார்த்த சித்தியர்த்தம். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்கிற நான்கு புருஷார்த்தங்கள் கிடைக்க வேண்டும். ஞான, வைராக்கிய, மோட்ச பிராப்தியர்த்தம். நாடு நன்றாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று தனிப்பட்ட பலன்கள், உலகத்திற்கான பலன்கள் என்று சங்கல்பத்தின் பலன்கள் இருந்தன.முதலில் என்ன சொல்கிறாளெனில், தீங்கின்றி என்கிறாள். எப்படி சமஸ்கிருதத்தில் ‘சமஸ்த துரிதோப சாந்த்யர்த்தம்’ என்று சொல்வோமோ அதையே தீங்கின்றி என்று ஆரம்பிக்கிறாள்.

அதற்கு அடுத்து, ‘‘நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து’’ என்கிறாள்.தாயார், பூமிப் பிராட்டியாக இருப்பதால், ஏதோ ஒரு ஊர் என்றும், ஒரு இடம் என்று மட்டும் சொல்லாமல் நாடெல்லாம் என்கிறாள். இங்கு ஒரு நாடு மட்டுமல்ல. எல்லா நாடுகளும்… அப்போது என்ன பொருளெனில் ஒட்டுமொத்த உலகமும் என்று பொருளாகிறது. ஏனெனில், அவள்தான் உலகமே… அவள்தான் பூமியாக இருக்கிறாள். இங்கு… அங்கு… என்று அவளால் மட்டும் எப்படி பேதம் பார்க்க முடியும். அதனால், நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து… உலகம் முழுக்க இருக்கும் எல்லா இடங்களிலும் திங்கள் மும்மாரி பெய்து. மாதத்தில் மூன்று முறை மழை பெய்ய வேண்டும். இந்த விஷயமானது பழந் தமிழிலக்கியங்களில் வரக் கூடியதாகும். ஏனெனில், ஒரு மாதத்தில் மூன்று முறை மழை பெய்ய வேண்டுமென்று பழங்காலத்தில் இருந்திருக்கிறது. ஒரு அரசனானவர் மந்திரிகளை பார்த்து, ‘‘மாதம் மும்மாரி பெய்கிறதா…’’ என்றுதான் கேட்பார். அப்போது மாதத்தில் மூன்றுமுறை மழை பெய்ய வேண்டுமென்று அர்த்தம். ஏனெனில், மழைதான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்.இதற்கு அடுத்த வரியில்…

‘ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்’

இந்த மழை பெய்வதற்கான காரணம் என்னவெனில், இந்தச் செந்நெல் முதலான தானியங்கள் நன்றாக விளைய வேண்டும். இந்தக் காலத்தில் நமக்கெல்லாம் ஐஸ்வர்யம், செல்வம் என்று சொன்னால் பணம்தான் நினைவிற்கு வரும். ஆனால், பழங்காலத்திலிருந்து பார்த்தோமானால், ஐஸ்வர்யம், செல்வம் போன்றவையெல்லாம் அன்றாடம் கிடைக்கக் கூடிய உணவு. அந்த உணவுக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய தானியங்கள். அந்த தானியங்களுக்கு ஆதாரமாக இருக்கக் கூடிய மழை. இதைத்தான் நாம் ஐஸ்வர்யம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், அந்த உணவோடு சேர்த்து நமது அன்றாடத்திற்கு தேவையான பால், தயிர், நெய் போன்றவற்றை தரக் கூடிய பசுவைத்தான் செல்வம், ஐஸ்வர்யம் என்று சொல்கிறார்கள். ஏனெனில், இந்த பால், தயிர், நெய் போன்றவையெல்லாம் உணவுக்கு மட்டுமல்ல. பூஜைக்கும் சேர்த்துத்தான் உபயோகப்படுத்துகிறோம். அதற்குப்பிறகு அனுஷ்டானங்களுக்கு தேவைப்படுகிறது. அக்னி ஹோத்திரம் செய்ய வேண்டுமெனில் நெய் வேண்டும். ஒரு பூஜையில் அபிஷேகத்தில் பால், தயிரெல்லாம் வேண்டும்.

நம்முடைய அன்றாடத்திற்கு தேவையானதை பசு கொடுக்கிறது. நம்முடைய உணவு முறையானது தானியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதற்கு அடிப்படையாக மழை இருக்கிறது. எல்லாவற்றையும் மொத்தமாக வைத்துத்தான் ஐஸ்வர்யம் என்று சொல்கிறார்கள். அதனால்தான், நாம் பசுவை மகா லட்சுமியாகப் பார்க்கிறோம். தானியத்தை தான்ய லட்சுமியாக பார்க்கிறோம். தனத்தை தன லட்சுமியாகப் பார்க்கிறோம். அப்போது, எல்லாவற்றையுமே நாம் மகாலட்சுமியினுடைய சொரூபமாகத்தான் பார்க்கிறோம். இப்போது இங்கேயுமே தாயார், மும்மாரி பெய்து என்று சொல்லிவிட்டு, ‘‘ஓங்கு பெருஞ் செந்நெல்’’ என்கிறாள்.வயலில் நெல் விளைகின்றது. அதில் மிக உயர்ந்த வகையாகச் சொல்லக் கூடிய செந்நெல் என்கிற வகை. இது சிவப்பு நிறம் கலந்து வரும் செந்நெல்லாகும். அந்தச் செந்நெல்லானது ஓங்கி வளர வேணும். அதுதான் ஐஸ்வர்யத்தினுடைய லட்சணம். அதற்குப் பிறகு, ‘‘ஊடு கயல் உகள’’ என்கிறாள். அப்படி வளர்ந்திருக்கிற செந்நெல் வயலுக்கு ஊடாக என்கிறாள். அந்த வயல் வெளிகளில் நெல் வளர்ந்து நிற்கும். கீழே தண்ணீர் இருக்கும். அந்த தண்ணீருக்கு நடுவே மீன்கள் இப்படியும் அப்படியுமாகப் போய் வருமாம் என்று மிகவும் கவித்துவமாக சாதிக்கிறாள்.

இதைச் சொல்வதற்கான காரணத்தை பார்க்க வேண்டும். இந்த செந்நெல்களுக்கு கீழே தண்ணீர் நிற்கிறது என்றால், அந்த நெல்லுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறதோ, அவ்வளவு தண்ணீர் நிற்கிறது என்று பொருளாகும். மழை பெய்தது மட்டுமல்லாமல், அந்த மழையை சரியாகத் தேக்கி வைத்து, தானியங்களை உபயோகப்படுத்தக் கூடிய ஆற்றல் மிகுந்த விவசாயம் அங்கு நடக்கிறது. அதில் கயல் என்கிற மீன்கள் விளையாடும் அளவிற்கு தண்ணீர் நிற்கிறது.அதற்கு அடுத்து,‘‘பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப’’ – ஆங்காங்கு குவளை மலர்கள் மலர்ந்திருக்கிறது. அல்லி மலர்களை குவளை என்றும் சொல்வார்கள். குவளையிலேயே செங்குவளை, கருங்குவளை என்றெல்லாம் சொல்வதும் வழக்கம். இந்தக் குவளை மலர்களில் இருக்கக் கூடிய தேனை பருகுவதற்காக, பொறி வண்டு என்று சொல்லக் கூடிய தனித்ததொரு வண்டானது இந்த குவளை மலர்களில் வந்து அமர்ந்து கொண்டு தேனை குடிக்கிறது. அதை, நாம் கண்களால் பார்க்கிறோம்.

முதலில் செந்நெல் கீழே இருக்கக் கூடிய மீன்கள் விளையாடுகின்றன. இப்போது, குவளை மலர்களில் வண்டுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. இதுவும் அந்த ஐஸ்வர்யத்தினுடைய வெளிப்பாடுதான். நீர் நிறைந்து இருக்கக் கூடிய குளத்தில்தான் குவளை மலர் மலரும். அப்படி சத்தான குளத்தில் மலர்ந்த குவளை மலரில்தான் நல்ல தேன் இருக்கும். அந்த நல்ல தேன் இருக்கக்கூடிய குவளை மலரில்தான் இந்த வண்டு உட்காரும். அப்போது, ‘‘பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப’’ என்கிற ஒரு வார்த்தையினாலேயே அந்த இடத்தினுடைய நீர் வளம், இடத்தினுடைய நில வளம் இரண்டையுமே தாயார் காண்பித்துக் கொடுக்கிறாள்.
(தொடரும்)

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi