மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து இவ்வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடவும், அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில், திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக்கோரியும், ராமலிங்கம் என்பவர் திருப்பரங்குன்றம் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கக்கோரியும், பரமசிவம் என்பவர் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்க தடை விதிக்கக்கோரியும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் சார்பில், தர்காவை பராமரிக்க அனுமதி வழங்கவும், தர்காவுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு, குடிநீர், கழிப்பறை வசதி ஏற்படுத்தக்கோரியும் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரத்தில் வக்பு வாரியம், முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ உட்பட பலர் சார்பில் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், ‘‘தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும்பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர்.
இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமின்றி பிற சமயங்களை சேர்ந்தவர்களும் இதுபோல் வேண்டுதல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து பரிமாறுவது வழக்கமாக வைத்துள்ளனர்.’’ என வாதிடப்பட்டது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதி ஜெ.நிஷாபானு பிறப்பித்த உத்தரவு வருமாறு: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கீழமை நீதிமன்றங்களில் ஏற்கனவே முடிவு காணப்பட்டுள்ளது.
அதில் தலையிட வேண்டியதில்லை. ஆடு, கோழி பலியிடுவது என்பது தர்காவில் மட்டும் அல்ல. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள இந்து கோயில்களிலும் உள்ளது. பலியிடுதல் மத பழக்கத்தில் ஒன்றாகும். இந்த பழக்கம் தொடர திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அனைத்து தரப்பு மக்கள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மலையில் புதுப்பித்தல், கட்டுமானம் என எந்த பணி மேற்கொள்வதாக இருந்தாலும் தொல்லியல்துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
மலைப்பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் ஆட்களை அனுமதிப்பதில்லை. இதனால் மின் இணைப்பு தேவையில்லை. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். இதையடுத்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு: திருப்பரங்குன்றம் மலை திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் எவ்விதமான குவாரி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படக் கூடாது.
தர்காவில் கந்தூரி விழா நடத்தி ஆடு, கோழிகளை பலியிடுவதற்கும், ரம்ஜான், பக்ரீத் போன்ற இஸ்லாமிய புனித நாட்களில் தொழுகை செய்யும் உரிமையை நிலைநாட்ட உரிமையியல் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற வேண்டும். அதே நேரத்தில் சந்தனக்கூடு விழாவை நடத்திக் கொள்ளலாம். மலை மேல் மாலை 6 மணிக்கு மேல் யாரையும் அனுமதிக்கக்கூடாது. தர்காவின் புனரமைப்பு பணிகளுக்காக தர்காவின் அறங்காவலர் தொல்லியல் துறையிடம் முறையாக அனுமதி பெற்று பணிகளை செய்யலாம்.
மத்திய தொல்லியல் துறை திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் சர்வே செய்ய அனுமதிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பழங்கால சின்னங்களான கோயில் மற்றும் தர்காவின் எல்லைகளை குறிக்க சர்வே செய்யலாம். ஒரு ஆண்டுக்குள் சர்வேயை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்திருப்பதால் இந்த வழக்கு உரிய முடிவுக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
* ஆடு, கோழி பலியிடுவது என்பது தர்காவில் மட்டும் அல்ல. திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள இந்து கோயில்களிலும் உள்ளது. பலியிடுதல் மத பழக்கத்தில் ஒன்றாகும்.