மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரிய வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ராமலிங்கம், பரமசிவம், அப்துல் ஜப்பார் உள்ளிட்டோர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்; திருப்பரங்குன்றம் தென் பகுதியில் உமையாண்டார் குகை கோவிலும் 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்துள்ளது. தர்காவில் கடந்த ஜனவரியில் ஆடு, கோழிகளை பலியிட்டு உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது.
சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். சிக்கந்தர் பாதுஷா தர்கா புதுப்பிக்கும் பணியின்போது போலீஸ் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆடு, கோழி வெட்டக்கூடாது என்ற மனுக்களை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்தார். நீதிபதி நிஷா பானு உத்தரவுக்கு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பு வழங்கினார்.
வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பால் முன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மாறுபட்ட தீர்ப்பால் வழக்கு 3வது நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும். 3 வது நீதிபதியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.