காரைக்கால்: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் சனிபகவான் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இணையதளத்தில் பதிவு செய்பவர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு நேரடியாக பிரசாதம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில பக்தர்கள், தங்கள் கோயிலுக்கு பணம் செலுத்தி விட்டதாகவும், ஆனால் பிரசாதம் வரவில்லை என கோயில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், கோயில் அர்ச்சகரான வெங்கடேஸ்வர குருக்கள், பெங்களூரை சேர்ந்த ஜனனி ஆகியோர் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் பெயரில் பல ஆண்டுகளாக போலி இணையதளம் நடத்தி பக்தர்களிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு சென்னையிலிருந்து போலியான பிரசாதங்கள் அனுப்பி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கோயில் மேலாளர் சீனிவாசன், கடந்த 12ம்தேதி திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோயில் அர்ச்சகர் வெங்கடேஸ்வர குருக்கள் (52), பெங்களூரு பெண் ஜனனி (44) ஆகிய 2 பேரை கைது செய்து காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.