சென்னை: அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு என திருமாவளவன் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் விருதுகள் வழங்கி திருமாவளவன் பேசியதாவது:
அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு. இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா?. புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட போகிறீர்கள் என்று திரும்பத் திரும்ப கேள்வி கேட்கிறார்கள்.தற்காலிகமான பயன்களுக்காக இயக்கம் நடத்துகிறவர்களோடு நம்மை ஒப்பீடு செய்து பார்க்கிறார்கள் என்று அவர்களின் கேள்வியை நான் பரிதாபத்தோடு தான் பார்க்கிறேன். அது உங்கள் மதிப்பீடு. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் 234 தொகுதிகளுக்கு இணையானவர்கள், தகுதியானவர்கள். அந்த வலிமை எங்களுக்கு உண்டு. இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை. வெறும் தேர்தல் கணக்கில் சொல்லவில்லை, சமூக மாற்றத்தின் பார்வை அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நோக்கம்.
இவ்வாறு திருமாவளவன் பேசினார். நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் சிந்தனைசெல்வன், துரை.ரவிக்குமார், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாநில அமைப்பு செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ், வட்ட செயலாளர் சிட்டு (எ)ஆமோஸ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் திரளாக கலந்து கொண்டனர்.