டெல்லி: நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழ வாழ்த்துகள் என விசிக தலைவர் திருமாவளவனுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று காலை முதலே திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். அவரது தாயார் பெரியம்மாள் திருமாவளவனுக்கு பரிசு கொடுத்து வாழ்த்தினார்.
மேலும் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி நேற்று தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விழாவின் நிறைவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் உரையாற்றுகிறார்.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமாவளவன் ஜி! உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் அமைதி வாழ்த்துக்கள்.
நமது நாட்டின் பன்மைத்துவ மற்றும் கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதற்கும், நமது மக்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும் பகிரப்பட்ட உறுதிப்பாட்டில் வேரூன்றிய நமது பிணைப்பு, தொடர்ந்து வலுவடையும் என்று நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.