சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: இந்தி திணிப்பு என்பது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவில் ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் என்று முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களில், இந்தி தேசிய அலுவல் மொழியாக மாற வேண்டும் என்பது, இந்தி பேசக்கூடியவர்களின் செயல் திட்டமாக உள்ளது. இது தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. பிஎம் ஸ்ரீ என்ற பெயரில் பள்ளிக்கூடங்களை நிறுவுகின்றனர்.
அந்த பள்ளி கூடங்களில் தாய்மொழி, ஆங்கிலம், 3வதாக ஏதேனும் ஒரு இந்திய மொழி என்று கூறுகின்றனர். இந்தி பேசக்கூடியவர்கள், 3வது மொழியாக எந்த மொழியை பேசுகின்றனர் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தி, ஆங்கிலம் என 2 மொழியைதான் கற்கிறார்கள். பிறமொழி பேசக்கூடியவர்களைத்தான் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியையும் கட்டாயமாக கற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.