சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆகஸ்ட் 17ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அவரது 62வது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நேற்றைய தினம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் விழா நடைபெற்றது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது. நிறைவாக, கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்புரையாற்றுகிறார்.
இந்தநிலையில், திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அதில், சமூகக் கொடுமை, ஆதிக்க மனப்பான்மை, வறுமை ஒழிந்த சமத்துவச் சமுதாயம் காணும் நம் பயணத்தில் தோளோடு தோள் நிற்கும் தோழமை, சகோதரர் ‘எழுச்சித் தமிழர்’ திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! இவ்வாறு தெரிவித்துள்ளார்.